13122024Fri
Last update:Wed, 20 Nov 2024

G-7 உச்சிமாநாடு நாளை ஆரம்பம்

09col e14368881இலங்கைக்கும் முதன்முதலாக அழைப்பு; ஜனாதிபதி இன்று ஜப்பான் பயணம்

G-7 அமைப்பின் 42வது உச்சிமாநாடு நாளை ஜப்பானில் ஆரம்பமாகிறது. நாளையும் மறு தினமும் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கைக்கு முதன் முதலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (மே 25) ஜப்பான் புறப்பட்டுச் செல்கிறார்.

கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த G-7 அமைப்பில் அங்கத்துவ நாடுகளாக இருக்கின்றன. 1975ம் ஆண்டு மத்திய கிழக்கில் எண்ணெய் தொடர்பிலான நெருக்கடி நிலையை ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக இந்த அமைப்புத் தொடங்கப்பட்டது.

உலகம் தற்பொழுது பல பயங்கரவாதப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளால் பல நாடுகளில் பொருளாதாரம் ஆட்டம் காண்கின்றது. இந்த நிலையில், இவ்வாறான பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்காக ஒவ்வொரு வருடமும் இந்த உச்சிமாநாடு நடந்து வருகிறது.

நாடுகளிடையே நிலவும் பலவீனமான பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவரும் முகமாக வர்த்தக நடைமுறைகளை தளர்த்துதல், அரச தனியார் துறைகளில் செலவினங்களைக் குறைத்தல், பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தல் போன்ற விடயங்களில் இந்த அமைப்பு கவனம் செலுத்திவருகிறது. மேலும், சந்தை, எண்ணெய் விலைகளில் தொடரும் வீழ்ச்சி, மத்திய கிழக்கு நிலைமை, உக்ரேன், தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளும் மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த வருட மாநாட்டுக்கு முன்னோடியாக ஏப்ரலில் அமைச்சர்கள் மட்ட மாநாடு நடத்தப்பட்டது. அதில் சிரியா மற்றும் உக்ரேனில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட மரணங்கள், அகதிகள் பிரச்சினை குறித்து அமைச்சர்கள் ஆராய்ந்தனர். இந்த மாநாட்டின் முடிவில் கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அதில் மேற்படி நாடுகளில் காணப்படும் அரசியல் நிலைவரத்தை எடுத்துரைப்பதிலும், அங்கத்துவ நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

உலகை அச்சுறுத்தும் மற்றொரு பிரச்சினையாக கடல் கடந்த பயங்கரவாதம், குடிப்பரம்பல் என்பன காணப்படுவதால் இதைத் தடுப்பதற்கு ஆவன செய்ய வேண்டியதன் கடப்பாடு அங்கு உணர்த்தப்பட்டது. 1975ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது முதல் இந்த G-7 அமைப்பு பல அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை குறித்து ஆராய்வதோடு, அதற்கு பரிகாரமாக பல தீர்வுகளையும் முன்வைத்திருக்கிறது. இதன்படி, 1996ம் ஆண்டு பெரும்கடன் சுமையில் பாதிக்கப்பட்ட 42 ஏழை நாடுகளுக்கு ஒரு நிவாரணத் திட்டத்தை இந்த அமைப்பு அறிமுகப்படுத்தியது.

இந்த அமைப்பில் ரஷ்யா ஒரு அங்கத்துவ நாடாக இருந்த போதும் (அப்போது இந்த அமைப்பு G-8 என அழைப்பட்டது.)

அது உக்ரேனின் இறைமையை தொடர்ந்தும் மீறி வந்ததால் இந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த நாடுகளில் ஏகமனதான தீர்மானத்தோடு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.