23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

8வது பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தையும் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு முன்வைத்தார்

Tamil LogoPresidentமுரண்பாட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அரசாங்கம் முன்னெடுத்துள்ள இணக்க அரசியலை பலப்படுத்த முன்வாருங்கள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 நாட்டின் ஒரு பிரதான தேசியக் கட்சி 35 வருடங்களும் மற்றும் ஒரு பிரதான கட்சி 32 வருடங்களும் இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஒரு புதிய இணக்க அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பல்வேறு வித்தியாசமான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வழியுறுத்தினார்.

இன்று (01) 8வது பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்தப் பிரகடனத்தைச் செய்தார். மோதலுக்குப் பிந்திய யுகம் உள்நாட்டு, சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக ஒரு இணைந்த சக்தியாக பணியாற்றுவதற்கு இலங்கைக்குக் கிடைத்துள்ள மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒரு தேசிய அரசாங்கத்தின்கீழ் இந்த புதிய ஐக்கிய கலாசாரம் ஆரம்பித்து வைக்கப்படுவது சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பெரிதும் உதவுவதோடு, 2020திற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மனித அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான சமூக பொருளாதார முன்னேற்றத்தை துரிதப்படுத்தும்.

அரசாங்கம் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைக்கும் அதேநேரம் ஒரு பொது வேலைத்திட்டத்திற்கு வருவதற்கு தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்துடன் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளினது தேர்தல் விஞ்ஞாபனங்களிலிருந்தும் முன்மொழிவுகளை கூட்டிணைக்க உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல் யாப்புக்கு முன்மொழியப்பட்டுள்ள 20வது திருத்தம் புதிய தேர்தல் முறைமைக்கான வடிவத்தை ஏற்கனவே வழங்கியிருப்பதோடு, வெறுக்கத்தக்க விருப்புவாக்கு முறைமையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு முன்மொழிவை ஏற்றுக்கொள்வதும் மேலும் எல்லா அரசியல் கட்சிகளும் சிவில் சமூகமும் ஏற்றுக்கொள்ளும் ஒரு புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதும் புதிய பாராளுமன்றத்தின் பொருப்பாக அமையும்.

21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாகும். ஆசியா உலகின் முதன்மை பொருளாதார மையமாக எழுந்திருக்கும்போது கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகளிலிருந்து உச்சளவு பயன்களை பெற்றுக்கொள்வதற்கு மிகவும் பொருத்தமான ஒரு இடத்தில் எமது நாடு பூகோல ரீதியாக அமைந்திருப்பது நாம் பெற்ற அதிர்ஷ்டமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை உச்ச பயன் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொருளாதார திட்டங்களையும் மூலோபாயங்களையும் வகுக்க வேண்டியது எல்லோரினதும் பொருப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எமது அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை ஆசிய மைய மத்திய வழி கொள்கையின் அடிப்படையில் அமைந்ததாகும். இந்த பூகோலமய உலகிலும் புதிய உலக ஒழுங்கிலும் நாம் ஒருவரை ஒருவர் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் எமது வெளிநாட்டுத் தொடர்புகள் வெளிப்படைத் தன்மை மற்றும் நட்புறவின் அடிப்படையில் தொடரும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனது அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் மத்தியில் எமது கௌரவத்தையும் கீர்த்தியையும் உறுதி செய்வதற்கு எமது பிரதிமையை திருப்திகரமாக மாற்றியமைப்பதில் வெற்றி பெற்றுள்ளது எனக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விவசாய பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு உணவு உற்பத்தி, போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக் கட்டுவதற்கு வினைத்திறன்மிக்க நடவடிக்கைகளை எடுத்தல், வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையில் அரசாங்கத்துறையை பலப்படுத்தல், இளைஞர் விரக்தி தொடர்பாக 1990ஆம் ஆண்டு ஆணைக்குழு அறிக்கையில் முன் வைக்கப்பட்ட பரிந்துரைகளை கூட்டிணைத்து ஒரு புதிய இளைஞர் கொள்கையை வகுத்தல் என்பன அரசாங்கத்தின் திட்டங்களாகும் என்றும் ஜனாதிபதி தனது உரையில் மேலும் தெரிவித்தார்.