16072024Tue
Last update:Wed, 08 May 2024

இலங்கையின் வடக்கு கிழக்கே 65,000 வீடுகள் கட்ட அரசு திட்டம்

151222131020 lanka north jaffna 512x288 bbc nocreditஇலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 65,000 வீடுகளை கட்டும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளின் தேவை என்பது இதைவிட இருமடங்கு அதிகமாக இருந்தாலும் முதல் கட்டமாக இதை முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளது என மீள்குடியேற்றத்துறை துணை அமைச்சர் ஹிஸ்புல்லா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அந்தப் பகுதிகளின் அரசாங்க அதிபர்களின் அறிக்கையின்படி குறைந்தது 135,000 வீடுகள் தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது, அதில் பாதியளவுக்கான வீடுகளை கட்டும் பணிகளைத் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு வீடும் 550 சதுர அடி கொண்டாக இருக்கும் என்றும், திட்டமிடப்பட்டுள்ள மூன்றாண்டுகளுக்கு முன்னரே அதைக் கட்டிமுடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

Image caption குடிநீருக்காக நீண்ட நேரம் நடக்க வேண்டிய சூழல் பல இடங்களில் இருக்கிறது

போருக்கு பிறகு மீள்குடியேற்றப்பட்டவர்கள் கூட சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமல் தற்காலிக குடிசைகளில் வசித்து வரும் நிலையில் பலவித இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை அரசு உணர்ந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத வகையில், மேலும் பல இடங்களை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளது எனவும் மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் தெரிவித்தார்.

Image caption பல இடங்களில் இன்னும் படையினர் முகாம்கள் உள்ளதால் மக்கள் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் சர்வதேசக் கொடையாளிகள் மாநாடு ஒன்றை அரசு ஏற்பாடு செய்துள்ளது என்றும், அந்த மாநாட்டில் இதர 70,000 வீடுகளை கட்டுவதற்கான நிதியை பெற்றுக் கொள்ள அரசு எண்ணியுள்ளது எனவும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் போர் முடிந்து ஆறரை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் தற்காலிக இடங்களில் போதிய வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.