வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடிமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நத்தார் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டபோது இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம் ஒன்றுக்குச் சென்று அவர்கள்பற்றி விசாரித்ததுடன் அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான காணிகளை காண்பிக்கும் நடவடிக்கைகள் ஆறு மாத காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் என வாக்குறுதியளித்தார்.
அதற்கமைய இந்நடவடிக்கைகளின் முன்னேற்றம்பற்றி இதன்போது ஜனாதிபதி உத்தியோகத்தர்களிடம் வினவியதுடன் ஆறு மாத காலத்திற்குள் உரிய காணிகளை காண்பிக்கும் நடவடிக்கைகளை கட்டாயம் நிறைவு செய்யும்படி அறிவுரை வழங்கினார்.
அவ்வாறே மக்களின் ஏனைய வசதிகள் தொடர்பாகவும் வடக்கின் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தற்போது வட மாகாணத்தில் 1608 குடும்பங்களைச் சேர்ந்த 5732 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். இதற்கு மேலதிகமாக சுமார் 11073 குடும்பங்களைச் சேர்ந்த 38283 பேர் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனடிப்படையில் 44015 பேர் வட மாகாணத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியமர்த்துதல் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, வட மாகாண ஆளுநர் எச்.எம்.பி.எஸ்.பலிஹக்கார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.