15012025Wed
Last update:Tue, 07 Jan 2025

பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம்: இரண்டாவது கட்டமாக 570 ஏக்கர் காணி விடுவிப்பு

பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இரண்டாவது கட்டமாக மேலும் 570 ஏக்கர் காணி மீள் குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படவுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட 570 ஏக்கர் காணிகளை பார்வையிட மீள்குடியேற்ற செயலணி மற்றும் அரச அதிபர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் செல்லவுள்ளனர்.

பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1000 ஏக்கர் காணியை மீள்குடியேற்றத்துக்காக விடுவிப்பது என்ற அரசின் திட்டத்துக்கமைய இரண்டாவது கட்டமாக 570 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று யாழ். அரச அதிபர் என். வேதநாயகம் தலைமையில் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமி நாதனினால் உருவாக்கப்பட்ட மீள் குடியேற்ற செயலணியின் தலைவர் ஹரீம் பீரிஸ் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலர் ரஞ்சனி நடராஜபிள்ளை, பிரதம செயலாளர் பத்திநாதன், இராணுவ உயர் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நாளை வெள்ளிக்கிழமை இப்பகுதிக்குச் சென்று ஆராய்ந்து பார்ப்பதுடன் எந்தெந்த கிராம சேவகர் பிரிவுகளில் மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்கலாம் என்பது பற்றியும் தீர்மானிக்கவுள்ளனர். வலளாய், வீமன்காமம், குரும்பசிட்டி, வசாவிளான் உட்பட தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மிதிவெடிகள், கண்ணிவெடிகளின் அபாயம் இல்லை என இராணுவ அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

மிதிவெடிகள். கண்ணிவெடிகள் அகற்றப் பட்டு விட்டதற்கான அறிக்கையையும், மக்கள் மீள்குடியேறலாம் என்ற அறிக் கையையும் இராணுவத்தினர் கிளிநொச்சி கட்டளையிடும் தலைமையகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் குழுவினர் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று திரும்பியவுடன் சொந்த இடங்களை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.