இது வரை மீட்பு 30 சடலங்கள் மீட்பு
அரநாயக்க, சாமசர மலைப் பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கிய மேலும் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று (22) இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டன.
மலையின் உயரமான பகுதியில் வைத்தே குறித்த சடலங்களை மீட்டுள்ள இராணுவத்தினர், அப்பகுதியில் மேலும் பல சடலங்கள் காணப்படும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த உடலங்கள், உருக்குலைந்து சிதைவடைந்த நிலையில் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை (17) குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருந்ததோடு, நேற்றைய தினம் மீட்கப்பட்ட இரு சடலங்களுடன், இதுவரை 30 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்
சுமார் 100 பேரை இன்னும் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இதேவேளை, குறித்த அனர்த்தம் தொடர்பில் 132 பேர் காணாமல் போயுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகளில் தாமதம்
குறித்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் மழை காரணமாக பாதுகாப்புக் கருதி இராணுவத்தினர் குறித்த பகுதியிலிருந்து வெளியேற வேண்டி ஏற்படுகின்றமையால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிவாரணப் பொருட்கள் அதிகரிப்பு
குறித்த பகுதிக்கான நிவாரண பொருட்கள் அதிகளவில் சேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தாம் விரும்பியபடி நிவாரண பொருட்களை கொண்டு வர வேண்டாம் எனவும், பிரதேச செயலாளர் அல்லது கேகாலை மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.