05022025Wed
Last update:Tue, 07 Jan 2025

வடக்கில் 450 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம்

வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் வைத்திருக்கும் நிலத்தில் ஆயிரம் ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களுக்கு மீள கையளிப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்ததுடன், முதல் கட்டமாக 450 ஏக்கர் நிலத்தை எதிர்வரும் திங்கட்கிழமை விடுக்க தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் 400 ஏக்கரையும், கொழும்பு ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை அமைந்துள்ள பிரதேசங்களில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள கட்டிடங்களை அதன் உரிமையாளர்களுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

வடக்கில் விடுவிக்கப்படும் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 220 ஏக்கரில் போரினால் இடம்பெயர்ந்த ஆயிரத்து 22 குடும்பங்களை குடியேற்றி மாதிரி கிராம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலத்தை மக்களுக்கு வழங்குவதால், தேசிய பாதுகாப்பு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நிலம் விடுவிக்கப்படுவதால், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று குடியேற முடியும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்து்ளளார்.