இலங்கை சுங்கத்தால், கடந்த 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட சுமார் 359 யானைத் தந்தங்கள் காலி முகத்திடலில் இன்று (26) அழிக்கப்பட்டன.
இவ்வாறு அழிக்கப்பட்ட யானைத் தந்தங்கள் சுமார் 1.5 தொன் எடைகொண்டவை என்பதோடு, அவற்றின் பெறுமதி சுமார் ரூபா 387 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனத்தின் (CITES) காட்டு விலங்குள் மற்றும் மரங்கள் தொடர்பான அமைப்பின் செயலாளர் நாயகம் ஜோன் ஈ. ஸ்கன்லொன், இவ்வழிப்பு நடவடிக்கை தொடர்பில் பார்வையிடுவதற்காக நேற்றைய தினம் (25) இலங்கைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு ஆசியாவில் முதன்முறையாக, இவ்வாறான பெருந்தொகையான யானைத்தந்தங்கள அழிக்கப்பட்டது, இதுவே முதன்முறையாகும்.
ஆபிரிக்க நாடான தன்சானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முயற்சிக்கப்பட்ட யானைத் தந்தங்களே சுங்கத் திணைக்களத்தால் கடந்த 2012 மார்ச் மாதம் 12 ஆம் திகதி கைப்பற்றப்பட்டு, அது தொடர்பான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை பாதுகாக்கப்பட்டு சர்வதேச விதி முறைக்கு அமைய அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த செயற்பாட்டுக்கு சுமார் 7 மணி நேரங்கள் வரை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.