23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

வருடாந்தம் 4,000 கோடி ரூபா மீதம்

vehicle tax 720x480ஜயசிறி முனசிங்க

பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும், அரசாங்கத்தின் நிறைவேற்று பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் தீர்வையற்ற முறையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ததன் பயனாக அரசாங்கத்தினால் வருடமொன்றுக்கு நான்காயிரம் கோடி ரூபாவை மீதப்படுத்த முடிந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா சமர்ப்பித்த இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தில் தீர்வையற்ற முறையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதற்கான யோசனையை முன்வைத்தார். இதனை நாட்டு மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

தீர்வையற்ற முறையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிபத்திரம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அவை ஒழுங்கு முறையில் பாவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த யோசனையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போது தெரிவித்தார்.

இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சபை ஏனையவர்கள் இதுவரையும் அனுபவித்து வந்த தீர்வையற்ற முறையில் வாகனங்களை இறக்குமதி செய்யும் அனுமதிப் பத்திரத்தின் பிரதிபலன்கள் நீங்கியுள்ளது.

இந்த நிவாரணத்தை இழந்துள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நிதி நிவாரணம் வழங்கவென விரைவில் நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சர் ரவி கருநாணாயக்க கூறினார். எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் அரச சேவையில் இணைபவர்கள் இந்த கொடுப்பனவுக்குள் உள்வாங்கப்படமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சவால் மிக்க தீர்மானம் காரணமாக அரசாங்கம் கொள்வனவு செய்துள்ள அனைத்து வாகனங்களுக்கும் குறித்த வரியைச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப் பட்டுள்ளது.