22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

மலையக ஆசிரியர் உதவியாளர்: 360 பேர் நாளை நியமனம்

மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனத்தின் இரண்டாம் கட்டம் நாளை (04) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு பத்தர முல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இங்கு 360 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.

3021 பேருக்கு மலையக ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டு முதற்கட்டமாக 1688 பேருக்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டமாக நாளை வியாழக்கிழமை 360 பேருக்கு நியமனங்கள் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான கடிதங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கடிதத்தில் அச்சுப் பிழை காரணமாக எதிர்வரும் நான்காம் (4) திகதி வெள்ளிக்கிழமை என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக நியமனங்களை பெற்றுக்கொள்ள இருப்பவர்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது. இதனை தெளிவுபடுத்தும் முகமாகவே கல்வி இராஜாங்க அமைச்சு இந்த செய்தியை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது. எனவே அதன் அடிப்படையில் நாளை (04) வியாழக்கிழமை கடிதம் கிடைக்கப் பெற்ற அனைவரையும் பத்தரமுல்லை கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்திற்கு வருகை தருமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதன் மூன்றாம் கட்டம் இம்மாத இறுதியில் எஞ்சியுள்ள 973 பேருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாடசாலை மட்ட நியமனம் என்பதால் இதனை பகுதி பகுதியாக வழங்க தீர்மானித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.