வெலிகடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் 2012ம் ஆண்டு இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போது 27 கைதிகள் உயிரிழந்த சம்பவமானது திட்டமிட்ட செயல் என ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முன்னணியின் உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். கைதிகளுக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர், விசேட அதிரடி படையினர் சிறைச்சாலைக்குள் சென்று கைதிகளின் பெயர்களை அழைத்து அவர்களை தனித் தனியாக சுட்டுக் கொலை செய்துள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் முன்னணியினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கொலை இடம்பெற்ற விதத்தை சிறைச்சாலைக்குள் அப்போதிருந்த சிறைக் கைதிகள் கூறுகின்ற போதிலும், அரசாங்கம் இன்று வரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதாக முன்னணியின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கமும் குழுவொன்றை நியமித்து விசாரணைகளை நடாத்தியுள்ள போதிலும், அதற்கான நடவடிக்கைகள் இன்று வரை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த கொலை சம்பவம் அப்போதைய பாதுகாப்பு செயலாளரின் உத்தரவிற்கு அமையயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதற்கான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என ஊழலுக்கு எதிரான முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, ஊழலுக்கு எதிரான முன்னணியினால் முன்வைக்கப்பட்ட நிதி மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான சம்பவங்களுக்கு இன்று நியாயம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர்ச்சியாக பல மனித உரி்மை மீறல்கள் பதிவாகியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்களை கீர்த்தி தென்னக்கோன் இதன்போது நினைகூர்ந்தார்.
அத்துடன், அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் சஞ்ஜீவ பண்டாரவை, மத்திய மாகாணத்தில் வைத்து கொலை செய்ய முயற்சித்தமையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் சிலருக்கு மாத்திரம் அதிகளவில் சொத்துக்கள் எவ்வாறு உள்ளன என கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இந்த பின்னணியின், 2012ஆம் ஆண்டு வெலிகடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் அறிக்கை இன்றும் பெட்டகத்தின் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான முன்னணி இதன்போது குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையை பெட்டகத்தில் வைத்திருக்காது, உரிய முறையில் விசாரணைகளை நடாத்த நீதி அமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கைதிகள் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் என ஊழலுக்கு எதிரான முன்னணி குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு பிரிவினர் அதிகார துஷ்பிரயோகத்தை முன்னெடுத்துள்ளதாக ஊழலுக்கு எதிரான முன்னணியின் ஏற்பாட்டாளர் துஷித பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தாம் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரச சொத்துக்கள் மற்றும் அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.