மக்கள் இணைந்த பிரதேச நிர்வாகங்களைக் கொண்டதாக நாடெங்கிலும் 2500 கிராம சபைகளை அடுத்த வருடத்தில் உருவாக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதுடன் அரச சேவையை மேலும் பலப்படுத்துவதற்கான அனைத்து செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
‘உற்பத்தித் திறன்’ விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் மத்தும பண்டார, வஜிர அபேவர்தன உட்பட அமைச்சர்கள், துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,
1979 இல் ஜே.ஆரின் காலத்தில் நாம் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை உருவாக்கி செயற்படுத்தினோம். இதில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பெரும் பங்களிப்பை வழங்கினர்.
மாகாண சபைகள் இயங்குவதால் மாவட்ட மட்டத்தில் அமைச்சுக்களை அமைக்க முடியாது. மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து மாவட்ட மட்டத்தில் மக்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். அதற்கான வியூகம் ஒன்றை விடுத்து செயற்படுவோம்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் இலக்கை நோக்கியதாக முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை ஆராய விசேட கண்காணிப்புக் குழுவை நியமிக்கவுள்ளோம். இதன் மூலம் இடம்பெறும் அனைத்து நடவடிக்கைகளையும் அறிய முடியும். இதன் மூலமான முன்னேற்றங்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மீள பார்க்க முடியும்.
மாலைதீவு போன்ற நாடுகள் தமது பொருளாதாரத்துறைகளை இனங்கண்டு அவற்றைப் பலப்படுத்தி வருகின்றன. தண்ணீர் கூட இல்லாத சிங்கப்பூர் பொருளாதாரத்தில் ஆசியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை எட்டியுள்ளதைக் குறிப்பிட முடியும்.
பிரதேச செயலக ரீதியில் பயிற்சிகளை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் மக்களோடு இணைந்ததான செயற்திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இதனடிப்படையில் 2500 கிராம சபைகளை அமைத்து நடைமுறைப்படுத்தவுள்ளோம். இதில் அரசியல் கிடையாது, விசேட சபை உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படவுள்ளது.
மக்களை இணைத்துக் கொண்டு பிரதேச நிர்வாகங்களை அமைப்பதே எமது நோக்கம் இது தொடர்பில் நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் 7 மற்றும் 8ம் திகதிகளில் பொருளாதார நிபுணர்கள் இருவர் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் இலங்கையில் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறந்த பாராளுமன்றம், சிறந்த மாகாண சபை மற்றும் சிறந்த அரச சேவை உறுதிப்படுத்தப்பட்டால் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்பது எமது நம்பிக்கையாகும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.