மறைந்த காணியமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவின் வெற்றிடத்துக்கு புதிய ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடுதிரும்பியதும் மேற்கொள்ளப்படும் என ஐ.தே.க. பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.பிரதமர் நாடுதிரும்பியதும் பொருத்தமான ஒருவர் இந்த வெற்றிடத்துக்காக நியமிக்கப்படுவார் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
இதேவேளை, மறைந்த அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 24ம் திகதி கந்தளாவில் இடம்பெறவுள்ளன.
அமைச்சரின் பூதவுடல் தற்போது கம்பஹாவிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று கந்தளாயிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு 24ம் திகதி வரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். அன்றைய தினம் பிற்பகல் 4.30 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.
கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் குணவர்தன தமது 70வது வயதில் நேற்று முன்தினம் மரணமானார். இவரது பூதவுடலுக்கு ஜனாதிபதி, அமைச்சர்கள் உட்பட பெருமளவிலானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.