23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

2016: இலங்கை தமிழர் வரலாற்றில் முக்கிய வருடம்

sampanthan e1354460177963 626x3802016ம் ஆண்டு இலங்கை தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் அதி முக்கியமான வருடமாக இருக்குமென நான் நம்புகின்றேனென 60வது ஆண்டு நிறைவையொட்டி மட்டு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிவதொண்டர் மாநாடும் ஆறுமுக நாவலரின் எழுச்சியும் கருத்தரங்கின் இறுதி வைபவத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றத்தின் ஆதரவுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு நாவற்குடா சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய சம்பந்தன்

அடுத்த வருடத்திற்குள் இந்த நாட்டில் நீண்ட காலமாக தமிழ் மக்களுக்கு நடைபெறாத பல விடயங்கள் நடைபெற வேண்டிய நிலைமை தற்போது உருவாகியிருக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினை தற்போது இந்த நாட்டில் மட்டும் ஏற்றுக் கொண்ட பிரச்சினையல்ல. எமது பிரச்சினை முன்னெப்போதுமில்லாதளவுக்கு சர்வதேச மயமாக்கப்பட்ட ஒரு பிரச்சினையாகும்.

இன்று சர்வதேச சமூகம், பல சர்வதேச நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, விசேடமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை, இலங்கையில் நிரந்தரமான சமாதானம், நிரந்தரமான புரிந்துணர்வு, நிரந்தரமான நல்லிணக்கம், ஏற்படுத்தப்பட்டு ஓர் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமென்பதில் சர்வதேச சமூகம் உறுதியாக இருக்கின்றது.

ஆகவே இந்த நேரத்தில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒருமித்து எங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக் கொண்டு இந்த கருமத்தை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமாகும். இந்த உதவியை அனைவரும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

1915ம் ஆண்டு பெரும்பான்மை இன சிங்கள தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது, அவர்களின் விடுதலைக்காக தமிழ் தலைவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆற்றிய பணிகள் மிகவும் மதிக்கத்தக்கதாகும்.

ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் பிறந்தவர். மிகவும் வசதியான ஒரு குடும்பத்தில் பிறந்தவர். சமூகத்தில் மிகவும் மதிப்பை பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். அவர் கல்வியில் உயர் கல்வியில் தேர்ச்சியடைந்தார்.

தனது மொழியில் சைவமும் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற பணியில் மிகவும் தீவிரமாக இவர் செயல்பட்டார்.

சைவ சமயத்திலிருந்து எமது மக்கள் சைவ சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் வேறு மதங்களுக்கு மாறிச் சொல்வதை தடுக்க வேண்டுமென்பதில் அக்கறையோடு இருந்தார். தெரியாமை காரணமாக அல்லது அறியாமையின் காரணமாக மக்கள் மத மாற்றத்தில் ஈடுபடக் கூடாது.

மத மாற்றத்திற்கு பலியாகக் கூடாது. மக்கள் மத்தியில் சென்று சைவத்தின் தகைமைகளை பெருமைகளை விளக்க வேண்டியது அத்தியாவசியமானது என்ற கடமையை மக்களிடம் செய்தால்தான் மத மாற்றத்தை தடுக்கலாம் என்பதை ஆறுமுக நாவலர் உணர்ந்தார். அதன்படி நடந்தார்.

தமிழ் மொழியை வளர்ப்பதில் முன்னேற்றுவதிலும் அவர் பெரும் பங்காற்றினார். யாழ்ப்பாணத்தில் கல்வி வளர்ச்சிக்காக அவர் பாரிய பங்களிப்பைச் செய்தார் அவர் தனக்காக வாழவில்லை. அவர் மக்களுக்கு வாழ்ந்தவர். மக்கள் மத்தியில் சைவத்தை வளர்ப்பதற்காகவும் தமிழ் மொழியை எழுச்சி பெறுவதற்காகவும் அவை இரண்டையும் மக்கள் பின்பற்ற வேண்டுமென நீண்டகாலமாக பாரிய பணியாற்றினார்.

அவருக்கு எப்போதும் நன்றியுடையவர் களாக நாம் இருக்க வேண்டும். அதனை நாங்கள் பின்பற்ற வேண்டும்.

சுவாமி விபுலானந்தர் கல்வியில் தேர்ச்சியடைந்தார். தமிழ் மொழியின் பேராசிரியராக அன்னாமலை பல்கலைக்கழகத்தில் கடமை புரிந்தார். மட்டக்களப்பில் பல பாடசாலைகளை வளர்ப்பதில் கடும் முயற்சி எடுத்தார். சிவானந்தா வித்தியாலயம் அவரால் உருவாக்கப்பட்ட ஒரு பாடசாலையாகும். திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்துக் கல்லூரிக்கும் சுவாமி விபுலானந்தர் ஒரு காரணகர்த்தாவாக இருந்தார்.

ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுவாமி விபுலானந்தர் மட்க்களப்பைச் சேர்ந்தவர். இவர்களின் படிப்பினைகளை பின்பற்ற வேண்டியது எமது கடமையாகும். விசேடமாக இளைஞர்கள் இவர்களைப் பின்பற்ற வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் ஒரு முக்கியமான மாவட்டம். தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்கின்றனர். இரண்டாவது மாவட்டம் யாழ். மாவட்டத்திற்கு பிறகு தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்வது மட்டக்களப்பு மாவட்டத்தில்தான்.

வட மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்குமிடையில் பாலமாக அமைவது திருகோணமலை மாவட்டமாகும்.

சைவத்துக்கும் தமிழுக்குமிடையில் பிரிக்க முடியாத ஒரு தொடர்பிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். சைவம் பாதுகாக்கப்படல் வேண்டுமாக இருந்தால் தமிழ் பாதுகாக்கப்படல் வேண்டும்.

தமிழ் வளர்ச்சியடைய வேண்டும். தமிழ் பாதுகாக்கப்படல் வேண்டுமாக இருந்தால் தமிழ் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் சைவம் பாது காக்கப்படல் வேண்டும் என்றார்.