புளுமண்டல் ரயில் பாதையோரத்தில் வாழும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாது அவர்களது வீடுகள் உடைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் மக்களை நடுவீதியில் தவிக்கவிட்டு அரசியல் செய்யும் தேவை தனக்கு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவையில் அவர் எடுத்துக் கூறிய போது அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜனாதிபதி தலையிட்டு நிலைமைகளை சுமுகமாக தீர்த்து வைக்க ஆலோசனை முன்வைத்தார்.இதற்கமைய
மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் வீடுகளை உடைப்பது நிறுத்தப்பட்டது, இந்த பிரச்சினையை கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாவட்ட அமைச்சர்களும், எம்பிக்களும், கலந்து பேசி மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது:
வடகொழும்பு புளுமெண்டால் ரயில் பாதையோரத்தில் வாழும் ஏழை மக்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நூற்றுக்கு நூறுவீதம் எமக்கு வாக்களித்தவர்கள். பின்னர் ஆகஸ்ட் பொது தேர்தலின் போதும் மீண்டும் எம்மை முழுமையாக ஆதரித்தவர்கள். எனவே இந்த மக்களை நடு வீதியில் நிறுத்திவிட்டு எனக்கு ஒரு அரசியல் பயணம் கிடையாது. இவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட வேண்டும்.
அதன்பின்னரே இவர்களை தற்போதைய இடத்திலிருந்து அகற்றவேண்டும். அதற்கு இந்த மக்களும் தயார்”, அமைச்சர் நிமல் சிறிபால சில்வா, ஒரு குடும்பத்துக்கு இரண்டரை இலட்சம் ரூபா வழங்கி வீடுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டதாக கூறினார்.
ஆனால் அத்தகைய எந்த ஒரு மாற்று ஏற்பாடுகளும் இது வரை செய்யப்படவில்லை. எப்படியிருந்தாலும் ஒரு கழிவறை கூட கட்ட முடியாத இரண்டரை இலட்சம் ரூபாவில் மாற்று வீடுகள் ஒருபோதும் கட்ட முடியாது என நான் கூறினேன்.
இதையடுத்து தனது அமைச்சு மூலம் மாற்று வீடுகள் கட்டி தர முடியும் என்றும், அதற்கான நிதியை ஒதுக்கி தர பெற்றோலிய துறை அமைச்சும், போக்குவரத்து துறை அமைச்சும் முன்வர வேண்டும் எனவும் மேல்மாகாண மெகாபொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார். இந்த நிதியை ஒதுக்கி தருவது யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் வீடுகளை உடைப்பதை நிறுத்தி, இந்த பிரச்சினையை கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொழும்பு மாவட்ட அமைச்சர்களும், எம்பிக்களும், கலந்து பேசி மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.