22122024Sun
Last update:Wed, 20 Nov 2024

மக்களது கருத்துக்களைக் கவனத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி

06 10 1140x570பெறப்பட்டுள்ள மக்களது கருத்துக்களைக் கவனத்திற் கொண்டு புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இன்று (25) பிற்பகல் காலி வித்தியாலோக மகா பிரிவெனாவில் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், பொதுமக்களின் விருப்பத்திற்கு அமைவாகவே அன்றி அதற்குப் புறம்பான எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாரில்லையென வலியுறுத்தினார்.

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதன் மூலம் இந்நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை மேலும் வலுவடையச் செய்வதே ஒழிய எந்தவகையிலும் அதனை சிக்கலானதாக ஆக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லையெனவும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

அவ்வாறே நாட்டுக்குப் பொருத்தமான ஓர் அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல் சட்டநிபுணர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரதும் பொறுப்பு ஆகும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு மாத்திரமன்றி அரசின் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சில நேரங்களில் அவை விசித்திரமாகவுள்ளதெனவும், நாட்டின் நன்மைக்காக அன்றி நாட்டின் அழிவுக்காக இணையதளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாதெனவும் குறிப்பிட்டார்.

முப்படைகளில் பணிபுரிந்து 42 – 43 வயதை அடையும் போது அதாவது நாட்டுக்காக சிறந்த சேவையை வழங்க முடியுமான ஒரு காலகட்டத்தில் ஓய்வுபெற்றுச் செல்வோர் தமது அறிவு, ஆற்றல் மற்றும் ஆக்கத்திறன் ஆகியவற்றை மென்மேலும் நாட்டுக்காக வழங்குவதற்கு வாய்ப்பளிக்கும் தேசிய அபிவிருத்தி குழுமத்தை தாபிப்பதற்கான ஒரு வேலைத்திட்டத்தை  நாட்டில் முதற்தடவையாக நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

தான் விரும்பினால் மாத்திரம் இக்குழுமத்தில் சேர்ந்து அரச நிறுவனங்களுடன் தொடர்புபட்டு தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்ய முடியுமெனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டில் பல்வேறு துறைகளில் நிலவும் மனிதவளக் குறைபாட்டுக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை சர்வதேச நினைவு தினமாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தெடர்ந்து 2016 ஆம் ஆண்டு சர்வதேச வெசாக் பௌர்ணமி தினம் தாய்லாந்தில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் எதிர்வரும் ஆண்டு அது இலங்கையில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும் இவ் விழாவை சர்வதேச பௌத்த விழாவாக வெகு விமர்சையாக இலங்கையில் அனுஷ்டிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் முப்பீடங்களின் மகாசங்கத்தினரின் வழிகாட்டலின் கீழ் தற்போதிருந்தே நடைமுறைப்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி அவர்கள் இதன் போது தெரிவித்தார்.

காலி வித்தியாலோக பிரிவெனா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அக்குரட்டிய நந்தசார ஞாபார்த்த நூலக கட்டிடத்தை திறந்து வைத்தல் மற்றும் பிக்குகள் தங்குமிடத்திற்கான அடிக்கல் நாட்டும் புண்ணிய நிகழ்வு ஆகியன ஜனாதிபதி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இன்று பிற்பகல் விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், முதலாவதாக மத அனுட்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். பின்னர் புதிய நூலக கட்டிடத்தை திறந்து வைத்தல் மற்றும் பிக்குகள் தங்குமிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆகியவற்றில் பங்கேற்றார்.

குறைப்பாவனையுடைய பழக் கன்று நடுவதை முன்னிட்டு விகாரை வளவில் ஜனாதிபதி அவர்கள் நெல்லி கன்றினை நட்டு வைத்தார்.

பேராசிரியர் சங்கைக்குரிய அக்குரட்டிய நந்த தேரர் எழுதிய ‘மத்தக்க எத்தி தா சிட்ட’ (நினைவிருக்கும் நாள் முதல்) எனும் நூல் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

சோமாவதி ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர், கலாநிதி பலாங்கொடை சோபித நாயக்க தேரர், பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர், அக்கமகா பண்டிதர் சங்கைக்குரிய பல்லத்தர சுமனஜோதி நாயக்க தேரர், சங்கைக்குரிய திவியாசே யசஸ்ஸி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், தென்மாகாண ஆளுனர் ஹேமகுமார நானாயக்கார,  அமைச்சர்களான வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக்க, சந்திம வீரக்கொடி, பிரதி அமைச்சர் மனுஷ நானாயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல பண்டாரிகொட ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

11

10

08

07

06

02

01