நிதி மோசடி விசாரணைப் பிரிவின் கைது மற்றும் விசாரணை நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அரசியல் உயர் மட்ட தலையீடுகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுர குமார திசாநாயக்க எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முக்கிய புள்ளிகளுக்கு எதிரான கோவைகளை மூடிவிடுமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
தகவலறியும் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர்,
அரசினால் நியமிக்கப்பட்ட நிதி மோசடிப் பிரிவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒருவரை விசாரணை செய்யவும் கைது செய்யவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் முடியும். இத்தகைய அதிகாரங்களை தன்வசம் கொண்டுள்ள போதும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கைகள் செயலிழந்து போயுள்ளன.
அதிகாரங்கள் இருந்த போதும் அவற்றை செயற்படுத்த விடாது உயர் அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சில முக்கிய நபர்களின் கோவைகளை மூடிவிடுமாறு உயர்மட்டங்களிலிருந்து அழுத்தங்கள் விடுக்கப்படுகின்றன.
அதேவேளை தகவலறியும் உரிமைச்சட்ட மூலத்திலும் சில விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே நாம் சில திருத்தங்களைக் கொண்டு வர நேர்ந்தது.
கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக நான் அப்போதைய ஆளும் கட்சி பிரதம கொரடா தினேஷ் குணவர்தனவிடம் சபையில் கேட்டபோது, அவர் நாட்டின் பாதுகாப்புக் கருதி அதனை வெளிப்படுத்த முடியாது என்று கூறினார். இது போன்றதொரு யுகம் இந்த நாட்டில் இருந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.