15012025Wed
Last update:Tue, 07 Jan 2025

மாணவிகள் துஷ்பிரயோகம்; அதிபர் உடந்தை, ஆசிரியரை கைது செய்ய ஆர்ப்பாட்டம்

students etயாழ். நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் ஐவரை பாலியல் துஷபிரயோகம் செய்ய முயற்சித்தார் என  குற்றசாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்தும், அதனை மறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்ட அதிபர் மற்றும் மற்றுமொரு ஆசிரியரை கைதுசெய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிவதாக யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகளை தவறுகளின் போது தண்டிப்பதாக கூறி  மாணவிகளை அங்கங்களில் தொட்டு, பாலியல் சேஷ்டை முயற்சிகள் நடைபெற்றதாக மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் 55 வயதுடைய ஆசிரியர் வகுப்பறையில் உள்ள மாணவிகளை ஒரு மாத காலத்திற்கு மேலாக பாலியல்  துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபருக்கு மாணவர்கள் பல முறை தெரியப்படுத்தியும் குறித்த ஆசிரியர் மீது, அதிபர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், இன்று (22) காலை, மாணவர்கள் பாடசாலையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் மற்றும் யாழ்.பொலிஸார் முயற்சித்த போதிலும் அம்முயற்சி பயனளிக்காத நிலையில் குறித்த ஆசிரியரை நாளை (23) நண்பகல் 12.00 மணிக்குள் கைதுசெய்வதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.

சம்பவம் குறித்து யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வினவியபோது, குறித்த ஆசிரியரை கைதுசெய்வதாக அளித்த வாக்குறுதியின் பிரகாரம் குறித்த ஆசிரியரை கைதுசெய்யவுள்ளோம்.

அதன் பின்னர் குறித்த ஆசிரியரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு, நாளை (23) வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவோம் என்றார்.

குறித்த மாணவர்களை வைத்திய பரிசோதனைக்குட்படுத்துவதற்கான அனுமதியை நீதிமன்றில் கோரியுள்ளதுடன், குறித்த ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத பாடசாலை அதிபர் மற்றும், குறித்த சம்பவம் பற்றி தெரிந்திருந்தும் பாடசாலை அதிபருக்கு தெரியப்படுத்தாது மறைத்து வைத்திருந்த ஆசிரியரையும் கைதுசெய்வதற்கான அனுமதியையும் நீதிமன்றில் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.