26122024Thu
Last update:Wed, 20 Nov 2024

வடபகுதி மக்களுடனான இடைவெளியை குறைக்க நாம் முயற்சிக்கிறோம்

coldigகண்ணுக்குப் புலப்படாத எதிரியுடனேயே நாம் இப்போது யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம் என்று வடபகுதிக்குப் பொறுப்பான கடற்படைத் தளபதி ரியட் அட்மிரல் பியல் த சில்வா தெரிவிக்கிறார். அவர் எமக்கு வழங்கியுள்ள பேட்டி வருமாறு:

கேள்வி : யுத்தத்தின் பின்னர் வடக்குக் கடற்படை படைகளின் தளபதி என்ற வகையில் உங்களது கடமைகள் எவ்வாறு உள்ளன?

பதில் : யுத்தம் இடம்பெற்ற வேளையில் நாம் அறிந்த பிரதான எதிரியொருவர் இருந்தார். அந்த எதிரியை தோல்வியடையச் செய்யவே நாம் யுத்தம் செய்தோம். தற்போது நாம் அப்படி அறிந்த எதிரி யாருமில்லை. ஆனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஆபத்திலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை. இந்த சம்பிரதாயமற்ற அச்சுறுத்தல் எமது நாட்டின் அரசியல், பொருத்தங்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நாம் தற்போது போராடுவது சம்பிரதாயமல்லாத எதிரியை அழிப்பதற்காகவே

கேள்வி : சம்பிரதாயம் அல்லாத எதிரியென நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?

பதில் : நாம் வாழும் தீவுக்கு வெளியேயிருந்து பலவிதமான அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நான் முன்னர் குறிப்பிட்டதுபோல் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாயிலாக அவை அமையலாம். இந்திய மீனவர்கள் எமது எல்லையில் மீன்பிடிப்பதை உதாரணமாகக் கூறலாம். அவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு எமது கடற்பிராந்தியத்தை பாவிக்கின்றார்கள். அவர்கள் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். அவை சட்டவிரோதமானவை.

வடக்கு வாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித் தொழிலை நம்பியே சீவிக்கின்றார்கள். இந்திய மீனவர்கள் ‘பொட்டம் ரோலிங்’ முறையில் ஆழ்கடலில் வலைவிரித்து பெரிய சிறிய மீன்கள் அனைத்தையும் பிடிக்கின்றார்கள். அதனால் எமது மீனவர்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் நாட்டிற்கு பெரும் நட்டம் ஏற்படுகின்றது. இந்த சட்டவிரோத மீனவர்களை பிடிப்பதற்கும் அவர்கள் எமது எல்லைக்கு வருவதை தடுப்பதற்கும் வடக்குக் கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடலில் நடைபெறும் எல்லா சட்டவிரோத நடவடிக்கைகளையும் எம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவற்றை முடிந்தளவு குறைக்க நாங்கள் தினமும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம்.

கேள்வி : இந்திய மீனவர்களின் பிரச்சினையில் கண்ணுக்குப் புலப்படாத அரசியல் பின்னணி உள்ளதா?

பதில் : தமிழ்நாடு மாநில முதலமைச்சரால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும். ஆனால் அதற்குப் பதிலாக அவர் எமது கடலில் மீன்பிடிப்பதற்கு உரிமையுண்டு என மீனவர்களை தப்பான பாதையில் வழிநடத்துகின்றார். அதனால் அவர்கள் பலம் பெறுகின்றார்கள். அவர்கள் தங்களது கடற்பிராந்திய வளத்தை அழித்து விட்டார்கள். தற்போது எமது கடலையும் அழிக்க முயற்சிக்கின்றார்கள்.

கேள்வி : இந்திய கடற்படை இப்பிரச்சினையில் தலையிடுவது எவ்வாறு?

பதில் : இரண்டு நாடுகளுக்குமிடையே மிகுந்த நல்லெண்ணம் உள்ளது. கடற்படையினருக்கிடையே பிரச்சினைகள் இல்லை. நாம் இப்பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டியது எவ்வாறென ஆராய பேச்சுவார்த்தை நடத்துகின்றோம். இப்பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வுகாண முடியாது.

கேள்வி : நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தேவையான வளங்கள் உள்ளனவா?

பதில் : எல்லாப் பிரதேசத்திலும் முகாமைப்படுத்தக்கூடிய வளங்கள் காணப்படுகின்றன. எமக்கு வரையறுக்கப்பட்ட துறைமுகமே உள்ளது. அங்கு குறிப்பிட்டளவு படகுகளையே நிறுத்த முடியும். நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் படகுகள் விலை அதிகமானவை. இவற்றைத் தொடர்ந்து கடலில் வைத்திருக்க முடியாது.

ஒவ்வொரு பயண முடிவிலும் பராமரிப்பு நடவடிக்கைக்காக துறைமுகத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இன்னொரு படகைப் பெற்றுக் கொள்வது மேலதிகப் பளுவாகும். துறைமுகம் மற்றும் முகாம்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து மேலும் வசதிகள் வழங்கப்பட்டால் எங்கள் நடவடிக்கைகள் இன்னும் வெற்றிகரமாக அமையும்.

கேள்வி : யுத்தம் காரணமாக படைகளுக்கும் பொது மக்களுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளதல்லவா? அந்த இடைவெளியைக் குறைக்க கடற்படை எவ்வாறான முறைகளை பின்பற்றுகின்றது?

பதில் : யுத்தகாலத்தில் மக்களுக்கும் படையினருக்கும் இடையே இடைவெறி உண்டானதை மறுக்க முடியாது. அது இயற்கையானதுதான். தற்போது அதைக் குறைப்பதற்கான காலம் உருவாகியுள்ளது. அதற்காக நாம் பல சமூக நலத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். மக்களுக்குத் தேவையான இடங்களில் சேவைபுரிய நாம் எப்பொழுதும் தயாராக உள்ளோம்.

நாட்டில் அதிக தூரத்திலுள்ள தீவு நெடுந்தீவாகும். தீவு மக்களுக்கான எமது சேவைகளுக்கு மேலதிகமாக அங்குள்ள மக்களின் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்க்க கடற்படைத் தளபதியின் யோசனைக்கேற்ப கடற்படையினருக்கு சீருடை தயாரிக்கும் ஆடைத் தொழிற்சாலையொன்றை அமைத்துள்ளோம். இதனால் எமக்கு எந்த இலாபமுமில்லை. இதை நாம் ஒரு சமூகப் பணியாகவே நடத்துகின்றோம்.

அதேபோல் நெடுந்தீவு மக்களுக்கான அம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வழங்கியுள்ளோம். கண் சிகிச்சை முகாம், பாடசாலைகளுக்கான உபகரணங்கள், கட்டடங்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை கிரமமாக மேற்கொள்கின்றோம். நாம் எப்போதும் மக்களுடன் நட்புறவைப் பேணுவதற்கான பல நிகழ்ச்சிகளை செயல்படுத்துகின்றோம். இதன் மூலம் நீங்கள் கூறிய இடைவெளியை குறைக்க முயற்சி செய்கின்றோம்.

கேள்வி : சூழல் அபிவிருத்திக்காக கடற்படை முறையான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றதா?

பதில் : ஆம் கடந்தகாலங்களில் இப்பிரதேசத்தில் இயற்கைச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. யுத்தகாலத்தில் பெருமளவு கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டன. மக்கள் வாழ்வை மேம்படுத்த நாம் சூழலைப் பாதுகாக்கவேண்டும். யுத்தத்தின் பின்னர் மக்கள் கண்டல் தாவரங்களை வெட்டி விறகாகப் பாவித்தார்கள். கண்டல் தாவரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக தற்போது 4000 மரங்களை நாட்டியுள்ளோம். இவ்வருடத்திற்குள் 10,000 மரங்களை நடுவதே எமது நோக்கமாகும்.

அதைத்தவிர சமுத்திரத்தை அண்டிய சூழலை துப்புரவு செய்யும் பணி படையினரின் தலைமையில் மக்களின் பங்களிப்போடு நடைபெறுகின்றது. கடந்த காலங்களில் ஆழமான கிணறுகளை இறைத்து துப்புரவு செய்தோம். அழகான இடங்களை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் கவனத்தை ஈர்க்கலாம். அதன் நன்மையும் மறைமுகமாக மக்களுக்கே கிடைக்கும். முருகைக்கல் பாறைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கேள்வி : தற்போதைய அரசின் முக்கிய கொள்கையான நல்லிணக்கத்திற்காக படையினர் எடுக்கும் முயற்சியை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக வடக்கில் பணிபுரியும் அதிகாரியாக நீங்கள் நம்புகின்றீர்களா?

பதில் : ஆம், நிச்சயமாக அவர்கள் மிகவும் நல்லுறவோடு எம்முடன் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். ஆனால் சொந்த காரணங்களுக்காக சில அரசியல் குழுக்களின் அழுத்தம் காரணமாக மக்களுக்கு தங்களுடைய விருப்பப்படி எங்களோடு இணைந்து உறவை வளர்க்க இயலாதுள்ளது.

கேள்வி : தற்போது அரசாங்கம் நல்லிணக்கம் என்னும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகின்றது. அதை நிறைவேற்ற கடற்படையினரிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பு என்ன?

பதில் : நல்லிணக்கம் என்னும் கொள்கையை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் எமது ஆதரவை வழங்குவோம். எங்களிடமிருந்து முக்கிய காணிகளைத் தவிர்த்து ஏனைய காணிகளை மக்களுக்கு கையளித்துவிட்டோம்.

கேள்வி : யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நாம் அவதானித்த ஒரு முக்கிய விடயம் மக்கள் பாதை விதிகளை மதித்து நடக்காமையாகும். இதனை மாற்ற எவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உள்ளீர்கள்?

பதில் : அதற்காக நாம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். உதாரணமாகத் தடைசெய்யப்பட்ட முறைகள் மூலம் மீன்பிடிப்பதால் மீன்வளம் குறையுமென்பதை நாம் மீனவ சங்கங்களுக்கு மட்டுமல்ல பாடசாலை மாணவர்களுக்கும் தெளிவுப்படுத்துகின்றோம். பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்துவதன் மூலம் அவை நேரடியாகப் பெரியோர்களை சென்றடையும். சூழலைப் பாதுகாப்பதன் பெறுமதி தொடர்பாக நாம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் எண்ணங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கின்றோம்.

கேள்வி : மீண்டும் யுத்தம் ஏற்படும் என்னும் பீதி தெற்கு மக்களின் மனதிலுள்ளது. சில அரசியல்வாதிகளும் இதனைப் பரப்புகின்றார்கள். வடக்கில் ஆங்காங்கே ஆயுதங்கள் கிடைக்கின்றன. உண்மையாக திரும்பவும் யுத்தமொன்று ஏற்படும் அறிகுறியுள்ளதா?

பதில் : யுத்தகாலத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களின் விபரங்கள் தற்போது கிடைக்கின்றன. சரணடைந்தவர்கள் அதை எமக்குக் காட்டுகின்றார்கள்.

அவைதான் எம்மால் கைப்பற்றப்படுகின்றன. வடக்கில் எங்கும் புதிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோன்று யுத்தத்தின் மூலம் தங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் மனநிலை தற்போது இப்பிரதேச மக்களிடமில்லை. அரசியல்வாதிகள் நிர்வாகத்தைத் தமக்குக்கீழ் கொண்டு வந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார்கள்.

கேள்வி : கடற்படை கச்சதீவில் இடைத்தங்கல் முகாமொன்றை அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளதல்லவா?

பதில் : கச்சதீவில் சாந்த அந்தோனி தேவஸ்தானத்தில் வருடந்தோறும் உற்சவமொன்று நடைபெறும். இவ்விழாவுக்கு இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொள்கின்றார்கள். கடந்த உற்சவத்தின் போது இந்தியாவிலிருந்து வந்த பிரதான பாதிரியார் தேவாலயத்தை நவீனப்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்காகவே தேவாலயத்தில் நிர்மாணப்பணிகள் கடற்படையின் அனுசரணையுடன் நடைபெறுகின்றன.

கேள்வி : ஜெயலலிதாவின் எதிர்ப்பின் பேரில் அந்நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக வதந்திகள் கூறுகின்றதே?

பதில் : இல்லை. மோசமான காலநிலை சீர்கேட்டால் கட்டடப்பொருட்களை கொண்டு செல்வதில் சிரமமேற்பட்டது. அதனால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிர்மாணப்பணிகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கேள்வி : வடக்கின் பாதுகாப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகள் குறைந்துள்ளதாக தெற்கில் கூறப்படுகின்தே?

பதில் : யுத்தம் நடைபெறும் காலங்களை விட யுத்தம் இல்லாத காலங்களில் பாவிக்கப்படும் பாதுகாப்புத் தந்திரங்கள் வேறானவை. நாங்கள் அதை மிகவும் திட்டமிட்டவகையில் முன்னரைப் போலவே பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். பாதுகாப்புக் குறைக்கப்படவில்லை. நிகழ்கால பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு மிகக் கவனமுடன் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம்.

கேள்வி : நல்லிணக்கப் பயணத்துக்கு அரசியல் வாதிகளிடமிருந்து எவ்வாறான ஒத்துழைப்புக் கிடைக்க வேண்டும்?

பதில் : கடந்த காலங்களில் இரு தரப்பினரும் அனுபவித்த துயரங்களை மறைக்க முடியாது. வடக்கு மக்களைப் போன்று தெற்கு மக்களும் யுத்தத்தில் பாதிப்படைந்தார்கள். அதேபோன்று நிலைமை மீண்டும் ஏற்படுவதை நாம் அனைவரும் விரும்பமாட்டோம். இருதரப்பு அரசியல்வாதிகளும் நன்கறிந்துள்ளார்கள். ஆகவே இந்நாட்டில் அனைவரும் ஒன்றாக வாழும் அபிவிருத்தி அடைந்த சூழலை உருவாக்க நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்.