26122024Thu
Last update:Wed, 20 Nov 2024

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகள் ஒருபோதும் பாதிப்படையாது –ஜனாதிபதி

President 02 11இந்தியாவுக்கும் இலங்கைக்குடையிலான உறவுகள் தொடர்பில் சில கடும்போக்காளர்கள் பல்வேறு பிழையான வியாக்கியானங்களை முன்வைத்து வருகின்றபோதும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இரண்டு நாடுகளும் மிகுந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள யாழ் அல்பிரட் துறையப்பா விளையாட்டரங்கை திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று (18) முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இவ்விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்து வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கு வழங்கக்கிடைத்தமை இந்திய இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்தக்கிடைத்த சந்தர்ப்பமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் தொடர்ச்சியான உதவிகள் கிடைக்கப்பெற்று வருவதுடன், சர்வதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மிகவும் முக்கியமானதாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

விளையாட்டரங்கு இனம், சமயம், குலம் என்ற எல்லா பேதங்களையும் தாண்டி நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் ஒரு மத்திய நிலையமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கிலும் தெற்கிலும் உள்ள பிள்ளைகளுக்கு மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் ஒரு மையமாக யாழ். துறையப்பா மைதானம் அமையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒரு ஜனநாயக அரசியல் தலைவரான அல்பிரட் துரையப்பா அவர்கள் மீது விடுக்கப்பட்ட துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்தின் மீது வைக்கப்பட்ட துப்பாக்கிச்சூடாகும் என்றும் இன்று இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் துரையப்பா விளையாட்டரங்கை மீண்டும் அபிவிருத்தி செய்து திறந்து வைப்பதனூடாக அந்த இறந்தகால நினைவுகளை அழித்து நல்லிணக்கம் தொடர்பான ஒரு புதிய பயணத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் செய்மதி தொழிநுட்பத்தினூடாக இந்த நிகழ்வில் உரையாற்றினார். இந்திய அரசாங்கம் இலங்கையுடன் எப்போதும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்திருப்பதாக இந்தியப் பிரதமர் இதன்போது தெரிவித்தார். இலங்கையிலுள்ள எல்லா இனங்கள் மத்தியிலும் சமாதானமும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்பது இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விளையாட்டு அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு விசேட யோகா நிகழ்வும் இதன்போது நடைபெற்றதுடன், 5000 பாடசாலை பிள்ளைகளின் பங்குபற்றுகையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வுடன் இணைந்ததாக இந்தியாவின் புதுடில்லி  நகரில் 11000 பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுகையுடன் நடைபெற்ற  இங்கு செய்மதி தொழிநுட்பத்தினூடாக தொடர்புபடுத்தப்பட்டது.

145 மில்லியன் ரூபா செலவில் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் யாழ் துரையப்பா மைதானம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே, வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர, இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், E., டக்ளஸ் தேவானந்தா மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.