தடைநீக்கம்: ஐரோ.ஒன்றியத்தின் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் பிரதமர்
இலங்கை மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய இலங்கை மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகுமென்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மீனவர்கள் இனிமேல் தாராளமாக மீன் ஏற்றுமதியில் ஈடுபடலாமென சுட்டிக்காட்டிய பிரதமர் மீனவர்களின் கைகளுக்கு நேரடியாக பணம் கிடைப்பதன் காரணமாக அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையுமென்றும் கூறினார்.
அலரி மாளிகையில் நேற்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“மீனவர்கள் இழந்திருந்த வருவாயை இந்த அரசாங்கம் மீள பெற்றுத் தந்துள்ளது. மட்டக்களப்பு, பருத்தித்துறை, சிலாபம் என அனைத்து பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களும் இதன்மூலம் தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக நாம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் பல்வேறு வேலைத் திட்டங்களை செயற்படுத்தி வந்தோம். சர்வதேசத்துடன இணங்கி செயற்பட்டதன் விளைவாகவே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீதான மீன்பிடி தடையை நீ்க்கியுள்ளது.
சர்வதேச கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் தற்போது தமது கவுன்சிலுக்கு முன்வைத்துள்ள அறிக்கையில், இலங்கை தற்போது சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளுக்காக பூரண ஒத்துழைப்பினை வழங்குமென குறிப்பிட்டுள்ளது என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கை மீன்களை இனி தாராளமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
இதேவேளை மீன்பிடி துறையை மேலும் நவீன முறையில் முன்னேற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த சமரவீரவும் நோர்வே அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீதான மீன்பிடி தடையை நீக்கியது போன்றே வெகுவிரைவில் எமக்கு ஜி. எஸ். பி. பிளஸ் சலுகையும் கிடைக்கும். இன்னும் ஓரிரு வாரங்களில் இதற்கான விண்ணப்பத்தை நாம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முன்னெடுக்கவுள்ளோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டெலி நேற்று மீன் ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கத்தை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
வத்தளை, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தடை நீக்கத்துக்கான அறிவித்தலை அவர் விடுத்ததுடன் அதற்கான அடையாளமாக மீன் ஒன்றை அங்குள்ள மீனவர்களிடம் கையளித்தார்.
வழங்கப்பட்டிருக்கும் இப்பெறுமதியான சந்தர்ப்பத்தை இலங்கை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லுமென தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வின்போது அமைச்சின் செயலாளர் மங்கலிக்கா அதிகாரியும் கலந்துகொண்டார்.