15012025Wed
Last update:Tue, 07 Jan 2025

வட கடலில் மீன் பிடிப்பதற்கு தென்பகுதியினருக்கு இனி அனுமதியில்லை

mahindamaeவட கடலில் மீன் பிடிப்பதற்கென தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதனை உடனடியாக நிறுத்துமாறு மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை தனது பணிப்புரையையும் மீறி தெற்கு மீனவர்கள் வடக்கு செல்ல அனுமதிப்பத்திரம் விநியோகித்த அதிகாரிகளுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து கடந்த வாரம் அமைச்சர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்படி தீர்மானங்களை அறிவித்தார்.

இச் சந்திப்பில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட வடக்கு மீனவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதன்போதே இந்திய மீனவர்களைப் போன்று வடக்கிற்கு அத்துமீறும் தென் மாகாண மீனவர்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பருவப்பெயர்ச்சி காரணமாக தென் மாகாணத்தில் ஆறு மாதங்களுக்கு மீன் பிடிக்க முடியாத நிலை உருவாகும். இச்சந்தர்ப்பத்தில் தெற்கு மீனவர்கள் வட கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள். இதற்கென அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதேநிலை வட கடலில் உருவானால் வடக்கு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக தென் கடலுக்கு வருவதில்லை.

தெற்கு மீனவர்களின் இச்செயன்முறையால் வடக்கிலுள்ள மீனவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதால் தெற்கைச் சேர்ந்த எந்தவொரு மீனவருக்கும் புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கக் கூடாது என அமைச்சர் ஏற்கனவே உறுதியாக கூறியிருந்தார்.

இருப்பினும் சில அதிகாரிகள் அமைச்சரின் பணிப்புரையையும் மீறி தெற்கு மீனவர்கள் வடக்கிற்கு சென்று மீன் பிடிக்க அனுமதிப்பத்திரங்களை விநியோகித்துள்ளனர். இவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் வட மாகாணத்திலேயே கூடுதலாக சட்டவிரோத மீன்பிடி இடம்பெற்று வருவதாக கடற் படையினர் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டினர். இதற்கு அமைச்சர் குற்றவாளிகளை தராதரம் பாராது கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கடற்படையினருக்கு உத்தரவிட்டார்.