15012025Wed
Last update:Tue, 07 Jan 2025

வாக்குறுதிகளை அமுலாக்க முழு இலங்கையர்களின் பங்களிப்பு கட்டாயம்

colhusaine175723618 4414664 13062016 kaa cmyஇடைமாற்ற கால நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் இலங்கை வழங்கிய உறுதிமொழியை நடைமுறைப்படுத்தும்போது சகல இலங்கையரும் உள்ளடக்கப்படுவதுடன் அவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பும் பெற்றுக் ெகாள்ளப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் வலியுறுத்தினார்.

ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை வலியுறுத்தினார். இலங்கையின் 30/1 பிரேரணையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளில், இடைமாற்றகால நீதி தொடர்பில் விரிவான திட்டமொன்று தேவையாகவுள்ளது.

ஒருங்கிணைந்த செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும், சரியான செயற்பாடுகளை வரிசைக்கிரமமாக முன்னெடுப்பதற்கும் இது வழிவகுக்கும் என்றும் ஹுசைன் தெரிவித்தார். இதற்கு சகல இலங்கையர்களும் உள்வாங்கப்படுவதுடன், அவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை அமர்வின் இறுதிப் பகுதியில் முன்வைக்கவிருப்பதாகவும் கூறினார்.

193 நாடுகள் பங்குபற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் நேற்று (13) ஜெனீவாவில் ஆரம்பமாகியது. இதன் அமர்வுகள் எதிர்வரும் ஜுலை 1ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. கடந்த வருட அமர்வில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரரணையை அமுல்படுத்துவது தொடர்பில் கொண்டிருக்கும் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் வாய்மூலமான அறிக்கையொன்றை இந்த அமர்வில் சமர்ப்பிக்கும் அதேநேரம், இவ்வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தில் தான் அவதானித்த விடயங்களையும் வாய்மூல அறிக்கையாக ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.

இவ்வாறான நிலையில் நேற்றைய முதலாவதுநாள் அமர்வு ஆணையாளரின் உரையுடன் ஆரம்பமானது. 2030 நிகழ்ச்சி நிரலில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு சகல நாடுகளும் முன்வருவதுடன், உண்மையான அபிவிருத்தியைத் தரக்கூடியதான மனித உரிமைகளைப் பலப்படுத்துவதற்கு சகல நாடுகளும் தமது அபிவிருத்தி நிதிகளை பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதற்கு பொறுப்புக்கூறல், சகலரையும் இணைத்துக்கொள்ளல், வெளிப்படையான ஆட்சி மற்றும் சட்ட நிறுவனங்கள் வினைத்திறனுடன் செயற்படுதல் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் எதிர்வரும் மாதங்கள் மற்றும் வருடங்களில் மில்லியன் கணக்கான உயிர்களை முன்னேற்ற முடியும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

வன்முறைகள் நிறைந்த சம்பவங்களில் தமது அலுவலகம் சுயாதீனமாக, துல்லியமாக வழங்கும் தகவல்கள் வன்முறைகள் மேலும் வளர்வதைத் தடுக்கும். எனினும், எனது அலுவலக அதிகாரிகள் செல்வதற்கு அனுமதி மறுத்த நாடுகள் குறித்து கவலையைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசாங்கங்கள் ஒத்துழைக்கவில்லை என்பதற்காக எனது அலுவலகம் அமைதியாக இருக்காது என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறியிருந்தார். செப்டெம்பர் மாத அமர்வில் தனது அலுவலகத்துடன் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்ட மற்றும் இடையூறு விளைவித்த நாடுகள் குறித்த பட்டியலை வெளிப்படுத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச மனித உரிமை விதிமுறைகளை கடைப்பிடிப்பது மற்றும் நடைமுறைப்படுத்துதில் மனித உரிமை பொறிமுறையை பின்பற்ற வேண்டும் என சகல நாடுகளிடமும் கேட்டுக் கொள்கிறேன். சகல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படவேண்டும். பக்கச்சார்பற்ற விசாரணை மற்றும் நேர்மையான விசாரணைகளுக்கு நீதி நிர்வாகம் மறுசீரமைக்கப்பட வேண்டும். சுயாதீன தேசிய அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

சிரிய மோதல்களைத் தொடர்ந்து அதிகரித்திருக்கும் அகதிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உரையில் பிரஸ்தாபித்திருந்தார்.