இந்து சமுத்திரத்தில் அமைவுற்றிருக்கும் கண்கவர் எழில் மிகு தீவே இலங்கை. நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் இத்தீவில் உலகிலுள்ள முன்னணி மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பல இனங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
என்றாலும்,இந்நாட்டில் வாழும் மக்கள் இனத்தாலும் மொழியாலும் வேறுபட்டுக் காணப்பட்டாலும் அவர்கள் ஆரம்ப காலம் முதல் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடனும் சக வாழ்வுடனும் தான் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சகவாழ்வுடன் கூடிய ஒற்றுமை இந்நாட்டை ஐரோப்பியர் ஆக்கிரமிக்கும் வரை நீடித்ததாகப் பதிவுகள் தெரிவிக்கிக்னறன.
அதாவது 1505 ஆம் ஆண்டில் போத்துக்கேயர் இந்நாட்டில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பைத் தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் அதன் பின் பிரித்தானியரும் இந்நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். சுமார் 443ஆண்டுகள் இந்நாடு ஐரோப்பியரி-ன் ஆளுகையின் கீழிருந்தது.
இந்தக் காலப்பகுதியில், உள்நாட்டு மக்கள் ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்கு எதிராக அவ்வப்போது கிளர்ச்சிகள் செய்தனர். புரட்சிகளையும் முன்னெடுத்தனர். ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்கு ஆரம்பத்தில் உள்நாட்டவர்கள் ஒத்தழைப்பு நல்கவில்லை. அதனால் உள்நாட்டு மக்களின் புரட்சியும் கிளர்ச்சியும் ஐரோப்பியருக்கு பெரும் தலையிடியானது. அதிலும் போர்த்துக்கேயரையும் ஒல்லாந்தரையும் விட பிரித்தானியரே உள்நாட்டவரின் அதிக எதிப்புக்கும் கிளர்ச்சிக்கும் முகம் கொடுத்தனர்.
அதனால், இந்த எதிர்ப்பையும் கிளர்ச்சியையும் பலவீனப்படுத்தவும் வலுவிழக்கச் செய்யவும் பிரித்தானியர் பயன்படுத்திய ஆயுதம் தான் பிரித்தாளும் தந்திரம். அத்தந்திரத்தின் உபாயமாக இனம், மதம், மொழி பாவிக்கப்பட்டது. இந்த உபாயம் சொற்ப காலத்தில் பயனளிக்கத் தொடங்கியது . சில உள்நாட்டவர்கள் பிரித்தானியரின் இந்நடவடிக்கயைச் சரிகண்டதோடு அவர்களின் ஆதரவாளர்களாகவும் மாறினர்.
இதனூடாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களைப் பிரித்தானியர் பறித்துக் கொண்டனர். ஒன்று பிரித்தானியருக்கு எதிரான உள்நாட்டவரின் எதிர்ப்பும், கிளர்ச்சியும் பலவீனமடைந்தது. அத்தோடு இன, மத பேதங்களுக்கு அப்பால் நீண்ட காலமாக நீடித்து நிலைத்திருந்த ஒற்றுமை மற்றும் சக வாழ்விலும் கீறல் ஏற்பட்டு விரிவடையத் தொடங்கியது. இதன் விளைவாக உள்நாட்டவரே ஒருவரையொருவர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைமை உருவானது. அது சொற்ப காலத்தில் ஆளை ஆள் நம்ப முடியாத நிலையைத் தோற்றுவித்து ஆளுக்காள் மோதிக்கொள்ளும் நிலைமையைத் தோற்றுவித்தது.
இந்நாட்டினரைக் கையாளுவதற்குப் பிரித்தானியர் பயன்படுத்தி-ய பிரித்தாளும் தந்திரம் உள்நாட்டவரே இரத்தம் சிந்தும் நிலைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது. அது 1900 களின் பின்னர் அதிக வெற்றிகளைக் கொடுத்துள்ளது. குறிப்பாக 1915, 1958, 1977, 1978, 1983 ஆண்டுகளில் இன ரீதியிலான கலவரங்கள், சுமார் மூன்று தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டு போர் என்பன அவர்கள் இட்ட நச்சு விதைகளின் வெளிப்பாடே. இக்கலவரங்களாலும் உள்நாட்டு போராலும் இந்நாடு இழந்தது கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் அவை அனைத்தும் இந்நாட்டுக்கு சொந்தமான பெறுமதி மிக்க வளங்கள்.
இருந்தும் கூட பிரித்தானியர் விதைத்த இந்த பிரித்தாளும் நச்சு விதையை சில அரசியல்வாதிகளும், சில அரசியல் கட்சிகளும் மாத்திரமல்லாமல் சில சமய அமைப்புக்களும் இன்றும் பயன்படுத்தவே செய்கின்றன. ஆனால் அவர்கள் இன்னும் யதார்த்ததை உணர்ந்து தம்மை சீரமைத்து கொள்ளாதது தான் கவலைக்குரிய வேதனையாக உள்ளது.
என்றாலும் காலா காலமாக ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்த மக்களுக்கு பிளவும் பிரிவினையும் பொருத்தமற்றது. அது ஏற்றுக் கொள்ள முடியாதது. முன்பைப் போன்று ஒற்றுமையாகவும், சக வாழ்வுடனும் வாழுமாறு வலியுறுத்தும் சமிங்ைஞகளும், நிகழ்வுகளும் அவ்வப்போது இடம்பெற்று வரவே செய்கின்றன.
அந்தவகையில் 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலை அனர்த்தத்தின் போது இந்நாட்டி-ன் 13 கரையோர மாவட்டங்கள் மிகக் கோரப் பேரழிவுக்கு உள்ளாகின. இதனால் 30,196 பேர் உயிரிழந்ததோடு, 21,411 பேர் காயங்களுக்கும் உள்ளாகினர். பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் இருப்பிடங்களை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகினர்.
இதேபோன்று, 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ள நிலை காரணமாக நாட்டில் 64 பேர் உயிரிழந்ததோடு, எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 2012 அம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட தென் பகுதி மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் வரட்சி. 2014 ஆம் ஆண்டில் பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்த, மீரியபத்தவில் ஏற்பட்ட மண்சரிவில் 27 பேர் உயிரிழந்ததோடு, 16 பேர் காணாமல் போயினர். 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறநாயக்காவில் சாமார மலை மூன்று கிராமங்களில் சரிந்ததால் 35 பேர் உயிரிழந்ததோடு 109 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதேகாலப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 3இலட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு இலட்சத்து 83 ஆயிரம் பேர் இருப்பிடங்களை விட்டு தற்காலிக நலன்பரி நிலையங்களில் தங்கியுள்ளனர்'.
இந்த அனர்த்தங்கள் எதுவும் எந்தவொரு இனத்தினரையோ, மதத்தினரையோ இலக்கு வைத்து ஏற்படவில்லை. இவ்வனர்த்தங்களால் இன, மத, மொழி பேதம் பாராது சகலரும் பாதிபக்கப்பட்டமை தான் வரலாறு.
அதேநேரம், இவ்வாறு ஏற்படும் அனர்த்தங்களில் சிக்குண்டு நிர்க்கதிக்கு உள்ளாகின்றவர்களும், உயிருக்கு போராடுகின்றவர்களும் இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றவர்களும் இன, மத மொழி பேதம் பாராது உடனுக்குடன் காப்பாற்றப்படுகின்றனர். சிங்களவர்கள் தானே நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களைக் காப்பாற்றத் தேவை இல்லை என்று தமிழரோ, முஸ்லிமோ சிந்திப்பதுமில்லை, அவர்கள் ஒதுங்கிக் கொள்வதுமில்லை, மாறாக விரைந்து சென்று அர்ப்பணிப்போடு செயற்படுகின்றனர், நிவாரணம் அளிக்கின்றனர்.
மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தான் இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு இன மதத்தினர் அடுத்த இன மதத்தினருடன் நடந்து கொள்கின்றனர். குறிப்பாக 2004 இல் சுனாமி பேரலையில் சிக்குண்ட புலிகள் இயக்க உறுப்பினர்களைக் கூட பாதுகாப்பு படையினர் காப்பாற்றியுள்ளனர்.
அதேநேரம் தென் பகுதியில் ஒரு முறை கடும் வெள்ளம் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக புலிகள் இயக்கத்தினர் கூட நிவாரணப்பொருட்களைத் திரட்டி வந்து விநியோகித்தனர். அண்மையில் களனி கங்கை பெருக்கெடுப்பின் போது வெள்ள நீரில் சிக்குண்டிருந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த இரு கர்ப்பிணிப் பெண்களையும் அவர்களது பிள்ளைகளையும் முஸ்லிம் இளைஞர்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டம் உள்ளிட்ட தென்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் வரட்சிக்கு உள்ளாகி குடிதண்ணீர் தட்டுப்பதாட்டுக்கு உள்ளான போது வடக்கு கிழக்கு உட்பட நாடெங்கிலிருந்து மக்கள் குடி தண்ணீரைக் கொண்டு சென்று கொடுத்து அவர்களுக்கு உதவினர்.இவ்வாறு நிறைய உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.
அதேபோன்று இவ்வாறான அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டும், இருப்பிடங்களை இழந்து நண்பர்களதும், தற்காலிக நலன் புரிநிலைகளிலும் தங்கி இருப்பவர்களுக்கும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் சமைத்த உணவு மற்றும் உடைகள் உள்ளிட்ட சகல நிவாரண உதவிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த எல்லா சந்தர்ப்பங்களையும் பொதுவாக எடுத்துப் பார்த்தால் இங்கு இன,மத,மொழி பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமானமே மேலோங்கி காணப்படுவதை அவதானிக்க முடியும். அனர்த்தங்களின் போது இலங்கையர் இன, மத, பேதங்களுக்கு அப்பால் வெளிப்படுத்துகின்ற மனிதாபிமானம் வெளிநாட்டவர்களைக் கூட ஆச்சரியப்பட வைத்த சம்பவங்களும் உள்ளன. அவ்வாறு உயர் மனிதாபிமானம் கொண்டவர்களே இலங்கையர்.
என்றாலும், பிரித்தானியரால் இந்நாட்டில் விதைக்கப்பட்ட நச்சுவிதையால் உருவாகி இருக்கும் பிரிவினையும், முரண்பாடுகளும் இந்த மண்ணுக்கு உகப்பற்றவை. எல்லோரும் ஒற்றுமையாகவும் சகவாழ்வுடனும் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தத் தான் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன என்று கூட வினவத் தோன்றுகின்றது. அவ்வாறு தான் அனர்த்தங்களின் போதான நிகழ்வுகளும் அமைகின்றன.
அதேநேரம், இந்நாட்டவர்கள் இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் வேறுபட்டவர்களாக இருந்த போதிலும், அவர்கள் மத்தியில் இரத்த உறவும், சமய தொடர்பும் நெருக்கமும் காணப்படவே செய்கின்றது. இதனை எவரும் மறுக்க முடியாது.அதனால் இனவாதத்தையும் மதவாதத்தையும் முற்றாகக் களைந்து சகலரும் மனிதாபிமானத்துடன் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும். இது இந்நாட்டினரின் முக்கிய பொறுப்பாகும்.
ஆகவே இயற்கை அனர்த்தங்கள் உணர்த்துகின்ற செய்திகளை உரிய முறையில் புரிந்து கொண்டு ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும், சகவாழ்வுடனும் வாழ்வதில் ஒவ்வொருவரும் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அதுவே வளமான இலங்கைக்கான அடிப்படைத் தேவையாக விளங்குகின்றது என்பதில் ஐயமில்லை.