இலங்கையில் பாரிய நிலச்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட கேகாலை மாவட்டத்திலுள்ள அரநாயக்கா பிரதேசத்தில், நிலத்தில் புதையுண்டு காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணியில், ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியிலும், நிவாராண பணியிலும் 200-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளரான பிரிகேடியர் ஜயநாத் வீரசூரிய தெரிவித்தார்.
இதுவரை, 5 பெண்கள் உள்பட 21 சடலங்களை ராணுவம் மீட்டுள்ளது. இதனை தவிர, காணாமல் போன 14 பேருடையதாக இருக்கலாம் என கருதப்படும் சில உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை சுமார் 130 என்று ராணுவ பேச்சாளர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் சிக்கி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 84-ஆக அதிகரித்துள்ளதாகவும், அதே வேளையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 116-ஆக குறைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் கூறுகின்றது.
அரநாயக்கா பிரதேசத்தில், இதுவரை 32 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 112 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மையத்தின் பதிவு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மழையுடன் கூடிய கால நிலை சில பிரதேசங்களில் தொடர்ந்தும் காணப்படுகின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வெள்ளம் குறைந்து வந்தாலும் அநேகமான குடும்பங்கள் தொடர்ந்து நலன்புரி மையங்களிலே தங்கியுள்ளன.
Image copyright Getty Image caption நலன்புரி மையங்களில் தங்கியுள்ள மக்கள்
இதனிடையே, கண்டி , நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மாகாணத்திலுள்ள பெருந் தோட்டங்களிலும் ஆங்காங்கே நிலச்சரிவு அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், 1600 குடும்பங்களை சேர்ந்த 6000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
இக் குடும்பங்களில் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள 850 குடும்பங்களை சேர்ந்த 3000 பேர், 45 பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.