26122024Thu
Last update:Wed, 20 Nov 2024

நல்லிணக்கத்தை விரும்பாத தேசவிரோத சக்திகள்!

tkn editoநீண்டதொரு ஆயுதப் போராட்டம் காரணமாக நாடு பாரிய பின்னடைவைக் கண்டிருந்த நிலையில், அந்த மோசமான நெருக்கடியிலிருந்து 2015 ஜனவரி 8 இல் நாடு மீட்கப்பட்டது. அன்று முதல் நாட்டில் நல்லாட்சி மலரத் தொடங்கியது. இதன் காரணமாக இனவாதச் சக்திகளின் வாய்களுக்குப் பூட்டுப் போடப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக அந்தச் சக்திகள் பெட்டிப்பாம்புகளாக அடங்கிப் போயின. எந்தவொரு இனவாதத் தரப்பும் மூச்சு விட முடியாத நிலையையே காண முடிந்தது.

நாட்டில் இனநல்லிணக்கத்துக்கான அடித்தளத்தை இட்டு இன, மத, மொழி பேதங்களற்ற இலங்கையர்களாக அனைவரும் ஒருதாய் மக்களாக ஒன்றுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி தலைமையிலான நல்லாட்சி அரசு திட்டம் வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் சூழ் நிலையில் தீய இனவாதச் சக்திகள் தனது இனவாத நச்சுப்புகையை கக்குவதற்கான சந்தர்ப்பத்தை, வாய்ப்பை எதிர்பார்த்த வண்ணமே உள்ளன. பேரழிவிலிருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் அரசு முழுமையாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமக்கொரு துரும்பு கிடைக்காதா என இனவாதச் சக்திகள் திறந்த கண் மூடாமல் காத்திருந்தன.

இத்தகையதொரு நிலையில் தான் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு,கிடக்குக்கு தனியான சுயாட்சி தேவை என்ற யோசனையை அண்மையில் வெளியிட்டிருக்கிறார். தனது யோசனையை அவர் வட மாகாண சபையிலும் முன்வைத்திருக்கிறார். நல்லதோ கெட்டதோ தனது சமூகத்துக்காக ஒரு யோசனையை முன்வைப்பதற்குரிய உரிமை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கின்றது. இந்த உரிமையை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது. அதனை ஏற்பதா, நிராகரிப்பதா என்பது வேறு விடயம்.

வடக்கு முதல்வரின் யோசனையின் மூலம் அவர் தேசத்துரோகமிழைத்ததாகக் கூறி அவரைக் கைது செய்யுமாறும், தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்யுமாறும் பொதுபல சேனாவும், ராவணா பலயவும் சிங்கள ராவயவும் கூச்சலிட்டுள்ளன. அது மட்டுமன்றி எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் அந்தப் பதவிக்குத் தகுதியற்றவரெனவும் அவர் தமிழர்களுக்காக மட்டுமே பேசுவதாகவும் கூறி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் பொதுபலசேனாவும், ராவணா பலயவும், சிங்கள ராவயவும் வலியுறுத்தியுள்ளன.

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வடக்கு, கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தவில்லை. அந்த மாகாணங்களின் அதிகாரங்களை தனியாகவும் ஏனைய மாகாணங்களை தனியாகவும் விட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்து அதற்கமைய அரசியலமைப்பு மாற்றம் பெற வேண்டுமென்பதையே வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் உரிமையை கேட்கும் உரிமை கூட அவர்களுக்குக் கிடையாதா? ஒரு கோரிக்கை முன்வைத்ததற்காக வடக்கு முதல்வரையும், எதிர்க் கட்சித் தலைவரையும் கைது செய்யவும், பதவி நீக்கவும் கோருவதற்கு இவர்கள் யார்? பெரும்பான்மைச் சிங்கள மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட இனவாதச் சக்திகளான பொதுபல சேனாவும், ராவணா பலயவும் சிங்கள ராவயவும் நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி மற்றொரு இரத்த ஆறு ஓடுவதற்கான மோசமான காரியத்தில் இறங்கியுள்ளன. மீண்டும் சிங்கள மக்களின் மனங்களுக்குள் இனவாத நஞ்சை ஊட்ட முனைந்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு இனநெருக்கடிக்கு நிலையான அரசியல் தீர்வை அதுவும் சகல தரப்பினராலும் ஏற்கக் கூடிய தீர்வை முன்வைக்க உறுதி பூண்டிருக்கும் நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முயற்சிகள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

வடக்கு முதல்வரின் யோசனையை கூட சம்பந்தன் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் விக்னேஸ்வரன் தனது சமுகத்துக்காக அவ்வாறான யோசனையை முன்வைக்கத் தகுதியற்றவரா எனக் கேட்க வேண்டியுள்ளது. வடக்கும் கிழக்கும் தனிநாடாக ஆக வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு உயர்மட்டமே ஏற்கவில்லை.

இந்த நிலையில் சிங்கள மக்களைத் தூண்டி தனது இரத்தப் பசியை தீர்த்துக் கொள்ளவே இந்த இனவாத சக்திகள் முனைகின்றன. நாட்டில் இனநல்லிணக்கம், மத நல்லிணக்கத்தை உறுதி செய்து சகலரையும் ஒன்றுபடுத்தி ஒரே குடையின் கீழ் வாழ வைக்கும் அரசின் முயற்சிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு வெறியாட்டத்தை பொதுபலசேனாவும், ராவணா பலயவும் சிங்கள ராவயவும் மீண்டும் தொடங்கி இருக்கின்றன.

இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். சிங்கள பௌத்த மக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் கோரிக்கை துரோகமென்றால் சிறுபான்மைச் சமுகங்கள் மீது இந்த இனவாதச் சக்திகள் கட்டவிழ்த்து விட்ட ஈனத்தனமான வெறியாட்டங்களை எவ்வாறாக அழைக்க வேண்டும்? இன்னமும் கூட சிறுபான்மை இனங்கள் மீதான வெறுப்பைத்தானே இவர்கள் கக்கிக் கொண்டிருக்கின்றனர்.

பொதுபலசேனா, ராவணா பலய சிங்கள ராவய ஆகியவற்றின் செயற்பாடுகள் நாட்டுக்கு ஆரோக்கியமற்றவையாகும். அரசு இவற்றை கைகட்டி, வாய்பொத்தி பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டில் மற்றொரு இனக்கலவரத்துக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. அதனைத் தாங்கும் சக்தி நாட்டுக்கோ மக்களுக்கோ கிடையாது என்பதை சகல தரப்புகளும் உணர்ந்து செயற்பட வேண்டும். இனம், மதம், மொழி என்பதற்கப்பால் நாம் மனிதர்களாக சிந்திப்போம். மானுடநேயத்துடன் கூடியதான புத்தர் பிரானின் கோட்பாட்டை மீட்டுப் பார்ப்போம்.