25112024Mon
Last update:Wed, 20 Nov 2024

வற்வரியில் திருத்தம்

z p06 security 20042016 kaaஅத்தியாவசிய பொருட்கள், நீர், மின்சாரம், மருந்து வகைகளில் அதிகரிப்பில்லை

மின்சாரக் கட்டணம், நீர் கட்டணம், அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்காத வகையில் எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி முதல் வற் வரியில் திருத்தம் கொண்டுவரப்படவிருப்பதாக இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்ம யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

மருந்துப் பொருட்களின் விலைகளில் வற் வரி தாக்கம் ஏற்படாதபோதும், தனியார் மருத்துவ சேவை வழங்குனர்களின் வற் அறவீடு அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்த பின்னர் கருத்து வெளியிட்டபோதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

2015ஆம் ஆண்டு 11 வீதமாகக் குறைக்கப்பட்ட வற் வரி எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி முதல் 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வரி அதிகரிப்பானது மின்சாரக் கட்டணம், நீர் கட்டணம், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு ஏற்புடையது அல்ல. மக்கள் மீது பாரத்தை சுமத்தாத வகையில் வற் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நலன்புரி பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு மக்களிடம் நேரடியான வரிகளை அறவிடமுடியாது. எனவே தான் வற் வரியில் திருத்தங்களைக் கொண்டுவந்து அரச வருமானத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வற் வரித் திருத்தமானது மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்தாதவகையில் மேற்கொள்ளப்படும். அத்துடன் பொருளொன்று உற்பத்தி செய்யப்படும்போதே வற் வரி அதனுடன் உள்ளடக்கப்பட்டு அதற்கான மறுசீரமைக்கப்பட்ட விலை முடிவுசெய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதுவரை காலமும் வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்புகள் மற்றும் தனியார் சுகாதார சேவைகள் மீதான வரிவிலக்கு மீளப்பெறப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் அரச சேவையில் பணியாற்றும் 7 மில்லியன் பேரிடமும் நேரடியாக வரி அறவிட முடியாது. பெரும்பாலானவர்கள் 50 ஆயிரத்துக்கும் குறைவான வருமானத்தை ஈட்டுபவர்கள். சனத்தொகையில் 7 வீதமானவர்கள் மாத்திரமே நேரடியான வரியை செலுத்துகின்றனர். மறைமுகமான வரியினை அதிகரிப்பதன் ஊடாகவே அரச வருமானத்தை அதிகரிக்க முடியும். இருந்தாலும் மக்கள் மீது சுமையை ஏற்படுத்தாத வகையில் இந்த அதிகரிப்பு அமையும். வற் வரி மறுசீரமைப்பின் போது எந்தவொரு அத்தியவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என்றார்.

அதேநேரம், வற் வரி மறுசீரமைப்பு போன்ற முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது விசேட குழுவொன்றை நியமித்து அதனூடாக தீர்மானம் எடுப்பதற்கும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார். ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுனர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைக் கொண்ட இந்த உபகுழு முக்கியமான தீர்மானங்களின் போது கூடி ஆராயும் எனச் சுட்டிக்காட்டினார்.

வற் வரி மறுசீரமைப்புத் தொடர்பாக மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இது தொடர்பிலேயே அண்மையில் ஜனாதிபதி பொலனறுவையில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியிருந்தார். வற் வரி மறுசீரமைப்புத் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு சிறந்த விளக்கமொன்றை அளித்திருந்தார். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வற் வரி மறுசீரமைப்பு இருக்கும் என்ற விளக்கம் அளிக்கப்பட்டிருந்ததாகக் கூறினார்.