சந்தேகங்கள் இருந்தால் தமிழ் கூட்டமைப்புடன் பேசத் தயார்
சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான சூழல் பாதுகாப்பு அனுமதி கிடைத்துள்ளதால் இந்த வருடத்தினுள் இந்த திட்டத்தை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருவதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆட்சேபனைகள் தெரிவித்து வருவது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக கூறிய அவர், அவர்களுடன் பேச அமைச்சு தயாராக இருப்பதாகவும் சகலரதும் கருத்துக்களை மதித்து பொருத்தமான இடத்தில் அனல் மின் நிலையத்தை அமைச்ச உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
இந்த திட்டத்தை 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனை மூன்று கட்டங்களாக முன்னடுக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு தடைகள் காரணமாக இதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆராய பிரதி அமைச்சரின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. சூழலுக்கு தீங்கற்ற விதத்தில் மிகச் சிறந்த மின் உற்பத்தி திட்டமொன்றை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நாம் சம்பூர் சென்று நிலைமைகளை ஆராய்ந்தோம். சூழலியலாளர்கள், மின்சார சபை அதிகாரிகள் மற்றும் சகல தரப்பினருடன் இது குறித்து ஆராயப்பட்டது. மிகவும் பொருத்தமான இடத்தில் இதனை அமைக்க இருக்கிறோம்.
சம்பூர் திட்டத்தை முன்னெடுப்பதில் தடைகள் கிடையாது. எந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் எதிர்ப்புகள், தடைகள் வரவே செய்யும் எந்த தரப்பினரதும் கருத்துக்களை நாம் ஒதுக்கமாட்டோம் என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அசைம்சர் அஜித் பி பெரேரா,
உரிய காலத்தில் சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கப்படாததால் 2018ல் நாடு மின்சார நெருக்கடிக்கு முகம் கொடுக்க உள்ளதுடன் 500 மெகாவோர்ட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடும் ஏற்பட உள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் அனல் மின் நிலையமொன்றை அமைக்க முடியாது.
சம்பூர் தொடர்பில் நாம் இந்தியாவுடன் பேசவில்லை. வேறு எந்த தரப்பிற்கும் இந்தியாவுடன் பேச்சு நடத்த முடியும்.
அதற்கு தடை எதுவுமில்லை. நாட்டுக்கு மிகச் சிறந்ததையே நாம் மேற்கொள்கிறோம். நெருக்கடியான நிலையில் இருந்து நல்ல நிலைக்கு நிலைமை மாறியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் பிரச்சினையிருந்தால் நாம் அவர்களுடன் பேசத் தயார். ஆனால் எம்முடன் பேசுவதற்கு த. தே. கூ. இதுவரை கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்றார்.
அமைச்சின் செயலாளர் படகொட கருத்து வெளியிடுகையில்,
சமூக அழுத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தி இந்த வருடத்தினுள் இந்த திட்டத்தை ஆரம்பிக்க அமைச்சு உத்தேசித்துள்ளது என்றார்.