அறுபத்தொன்பது வருடங்களின் பின்னர் சுவாமி விபுலானந்தருக்கு இன்று மீண்டும் காரைதீவில் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகின்றது. உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியரான முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளாருக்கு இன்று அவர் பிறந்த இடமான காரைதீவு மண்ணில் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்படுகிறது.
அடிகளார் இவ்வவனியில் பிறந்து 124 வருடங்களாகின்றன. அவர் பிறந்தது 1892.03.27 இல் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் ஈடிணையற்ற பேரறிஞர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவார். அவரது எல்லையற்ற கல்வி ஞானம் காரணமாக உலகின் பல பாகங்களிலும் அன்னாருக்கு திருவுருவச் சிலை எழுப்பப்பட்டிருக்கின்றது. அவர் பெயரில் பல பாடசாலைகள், பலஅமைப்புகள்இயங்கி வருகின்றன.அவர் தொடர்பான பல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பலஆய்வரங்குகள் நடாத்தப்பட்டிருக்கின்றன.அவர் சிவபதமடைந்தது 1947இல் ஆகும். அதன் பிறகு அவருக்கு பரவலாக திருவுருவச்சிலைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
அடிகளார் பிறந்தது கிழக்கிலங்கையின் பழம் பெரும் கிராமமான காரைதீவு மண்ணில் என்பது பலரும் அறிந்ததே.அந்த மண்ணில் அவர் சிவபதமடைந்து 22 வருடங்களின் பின்னர் அதாவது 1969 இல், பிரதான வீதியிலுள்ள விபுலாநந்த பொது நூலகத்தின் முன்றலில் சுவாமியின் திருவுருவச்சிலை டாக்டர் மா.பரசுராமன் தலைமையில் நிறுவப்பட்டது.
இந்தியாவிலிருந்து வருகை தந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரால் அச்சிலை 08.10.1969 இல் திறந்து வைக்கப்பட்டது. அப்போது எழுத்தாளர் மா.சற்குணம் எம்.ஏ. தொகுத்த 'அடிகளார் படிவமலர்' எனும் சிலை திறப்பு விழாமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது.அச்சிலை 1990 இனவன்செயலின் போது விசமிகளால் சுக்குநூறாக உடைத்தெறியப்பட்டது.
அதன் பின்பு 1999 இல் சுவாமி பிறந்த வீட்டிற்கு அருகில் , அதாவது மணிமண்டப சூழலில் மற்றுமொரு அழகான சிலை வெ.ஜெயநாதன் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டது. அதனை இராமகிருஷ்ண மிசனின் இலங்கைக்கான அப்போதைய தலைவர் ஸ்ரீமத் சுவாமிஆத்மகனானந்த மஹராஜ் 26.06.1999 இல் திறந்து வைத்தார். அத்தருணம் ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா தொகுத்த 'அடிகளார் நினைவாலய மலர் 'எனும் சிலை திறப்புவிழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இவ்விரு சிலைகளையும் பழம் பெரும் சிற்பி மட்டக்களப்பு, புல்லுமலையைச் சேர்ந்த நல்லரெத்தினம் வடித்திருந்தார். இன்று சித்ரா பௌர்ணமியன்று அடிகளார் சிவபதமடைந்து 69 வருடங்களின் பின்னர் காரைதீவின் பிரதான முச்சந்தியில், அதாவது விபுலாநந்த சதுக்கத்தில் அழகான திருவுருவச்சிலை திறந்து வைக்கப்படுகிறது.இச்சிலையை இன்று காலை 10.30 மணியளவில் இந்துமத அலுவல்கள், புனர்வாழ்வு,மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திறந்து வைக்கின்றார்.
இன்றைய நாளில் சுவாமியின் சிறப்புகள் பற்றி நினைவு கூருவது அவசியமாகின்றது.
சுவாமி விபுலாநந்த அடிகளார் இலங்கையின் முதலாவது மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதராவார். அதேவேளை உலகின் முதலாவது தமிழ்ப்பேராசிரியராவார். இத்தகைய சிறப்புகள் யாருக்கும் கிடைக்கவில்லை.அவர் விஞ்ஞானப் பட்டதாரி. இசைத்துறை வல்லுனர். ஆன்மிக ஞானி. ஆங்கில புலமை மிக்கவர். இது போன்ற எண்ணற்ற திறமைகள் மிக்கவர் அவர். சுவாமியின் சிலை திறப்புவிழா சிறப்பாக அமைய பிரார்த்திப்போம்.