தேசிய அரசின் இலக்கு நோக்கிய பயணத்துக்கு சீனா நேசக்கரம்
எதிர்வரும் ஜூன் மாதத்தில் அரசாங்கத்தின் புதிய பொருளாதார அபிவிருத்தி கொள்கைத்திட்டம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படுமென தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கமைய அடுத்த மூன்றாண்டு காலப்பகுதியில் நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜீ. 7 மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவுடன் தேசிய அரசின் இந்த புதிய கொள்கைத் திட்டம் வெளியிடப்படவிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். மக்கள் சீனக்குடியரசுக்கான தமது விஜயம் பெரும் வெற்றியை ஈட்டித்தந்திருப்பதாகவும், நம்பிக்கையூட்டுவதாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலானதும் வெளிப்படைத்தன்மையுடன் கூடியதுமான ஆதரவை சீன வெளிப்படுத்தியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
தேசிய அரசாங்கத்தின் இலக்கு நோக்கிய பயணத்திற்கான அடித்தளத்துக்கு உரமூட்டுவதாக சீனாவின் நேசக்கரம் அமைந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
சீன விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை அலரி மாளிகையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.
தமது பயணம் தொடர்பில் சுமார் அரை மணி நேரத்துக்கும் கூடுதலாக விளக்கமளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுத்தார்.
சீனாவுக்கோ வேறு உலக நாடுகளுக்கோ நாம் எதனையும் தாரைவார்க்கவில்லை. சில ஊடகங்கள் இந்த விஜயத்தையும் தமது செயற்பாடுகளையும் தவறான கண்கொண்டு பார்ப்பதாகவும் பிரதமர் இங்கு விசனம் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தின் இலக்கு நாட்டில் நல்லிணக்கத்தை தோற்றுவித்து அனைத்து இன மக்களையும் ஐக்கியமாகவும், ஒற்றுமையாகவும் ஒரே குடையின் கீழ் வாழச் செய்வதாகும். அடுத்தது புதிய அரசியலமைப்பை உருவாக்கி பாராளுமன்றத்துக்கு பதிலளிக்கக்கூடிய அரசாங்கத்தை அமைப்பதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முடிவுக்கு கொண்டுவருவது. ஊழல் மோசடிகளை ஒழித்து பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது நிலையான பொருளாதாரக் கொள்கைத்திட்டத்தை வகுப்பது. இவையே இந்த அரசின் பிரதான குறிக்கோளாகும்.
நாம் சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு கொடுத்த வாக்குறுதிக்கமைய எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு முன்னராக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும். இன முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சகலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்குள் பிரவேசிக்க வேண்டும். அனைத்து விசாரணைகளும் சட்டத்துக்கமையவே முன்னெடுக்கப்பட வேண்டும். நிதி மோசடிகளை விசாரிக்க விசேட சட்டம் கொண்டு வரப்படும்.
அரசியலமைப்பை மாற்றுவதற்காக அரசியலமைப்புச் சபை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி ஸ்திரமான நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்து 10 இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தல், அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை உரிய முறையில் கையாள்வது இவற்றையே நாட்டு மக்கள் எம்முடமிருந்து எதிர்பார்க்கின்றனர். இவற்றுக்கே எமது அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது.
எமது நாடு பொருளாதாரக் கடலில் சிறிய படகில் பயணித்துக் கொண்டிருக்கிறது. சுறாவளியும், கொந்தளிப்பும் அதிகமாகக் காணப்படும் உலக பொருளாதாரக் கடலில் சிக்கிக் கொண்டுள்ளோம். இந்த சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும். அதற்கு நிதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது. இந்தப் பயணம் இலகுவானதொன்றல்ல. எனினும் எவ்வாறாயினும் நாம் கரை சேர்ந்தாக வேண்டியுள்ளது. இதன் பொருட்டே இந்தியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுடனும் பேசி வருகின்றோம். புரிந்துணர்வு அடிப்படையில் அவர்களிடமிருந்து சாதகமான சமிக்சைகள் கிட்டியுள்ளன.
ஜி.எஸ்.பி+ சலுகையையும் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். இவற்றுக்கமைய மூவாயிரம் மில்லியன் சர்வதேச சந்தை வாய்ப்பை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் எமது பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
அமெரிக்காவுடனான வர்த்தக பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக எதனையும் கூற முடியாதுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் புதிய ஜனாதிபதியின் திட்டம் வெளியிடப்பட்டதன் பின்னரே அது குறித்துப் பேச முடியும். இடையில் பிரான்ஸ், கொரியா போன்ற நாடுகளுடனும் பேசி வருகிறோம்.
உலகத் தலைவர்களின் மாநாடான ‘ஜி7’ மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது.
அதில் எமது ஜனாதிபதியும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
நான் சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் கூடுதல் நேரமெடுத்து ஆலோசனைகளை மேற்கொண்டேன்.
எனது விஜயம் தொடர்பான நிகழ்ச்சி நிரலை அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். அவர்களிடமிருந்து அதற்கு ஆதரவு கிடைத்தது.