இந்தியாவின் இராமேஸ்வரத்தையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் பாக்குநீரிணை ஊடாக பாலம் அமைக்கும் தீர்மானத்தில் மத்திய அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், இணை அமைச்சருமான பொன் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் விடயத்தில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார். பாலம் அமைக்கும் திட்டத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் தெய்வ பட்டினம் பகுதியில் அமைந்துள்ள கோவிலில் கட்சிக்கு ஆசீர்வாதம் வேண்டி நடைபெற்ற பூஜை வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே பொன் இராதாகிருஷ்ணன் இதனைக் கூறியிருப்பதாக 'த இந்து' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் தனுஷ்கோடி வீதி வசதிகளையுடைய முன்னணி நகரமாக அபிவிருத்தி பெறும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் பதிலளித்த அவர், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்துக்கு இறுதித் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சு பேச்சுக்களை நடத்தி வருவதாகக் கூறினார். மீனவர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு எட்டப்படும்போது கச்சதீவை மீளப்பெறுவதா, இல்லையா என்பது தொடர்பில் முடிவு காணப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேநேரம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் தம்முடன் உத்தியோகபூர்வமாக எவரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லையென்றும், அதுபற்றிய தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லையென்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.