13122024Fri
Last update:Wed, 20 Nov 2024

ஐ.எஸ் செயற்பாடு குறித்து பரந்தளவில் கண்காணிப்பு

coldig3119848160942179 4125893 05042016 attகடும்போக்கு சொற்பொழிவுகளுக்கு தடை

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் உள்ளனவா என்பது குறித்து பரந்தளவில் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் செயற்படுகின்ற வெளிநாடுகளிலிருந்து கல்வி பயிலும் மற்றும் தொழில்புரியும் முஸ்லிம்கள், இனம் காணப்பட்ட வெளிநாட்டு கடும்போக்காளர்களின் குடிவரவு மற்றும் குடியகல்வு செயற்பாடுகளை கண்காணிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து எஸ்.எம்.மரிக்கார் எம்பி பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளவர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த காலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ள எவரும் நாட்டில் கைதுசெய்யப்படவோ வெடிபொருட்கள் பிடிபடவோ இல்லை.

விசேட அதிரடிப்படையினரால் தெஹிவளை கௌடானா பகுதி வீடொன்றில் தற்கொலை அங்கிகளுடன் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர்கள் கைதுசெய்யப்படவோ அல்லது ஆயுதங்கள் மீட்கப்படவோ இல்லை என்று தெரிவித்த அமைச்சர், இவ்வாறான தகவல்களை வெளியிடும் நபர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சர்வதேச ரீதியில் செயற்படும் புலனாய்வு நிறுவனங்களின் அறிக்கைகளை, தினமும் ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறான அமைப்புக்கள் குறித்த தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றை விசாரணைக்காக வழங்கவேண்டியது அரசியல்வாதிகளினதும், ஊடகவியலாளர்களினதும் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் செயற்படுவதை தடுப்பதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், கல்வி அமைச்சு, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம், உலமா சபை, சூரா கவுன்சில் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம்கள் கடும்போக்கான செயற்பாடுகளின் பக்கம் கவனம் செலுத்துவதை தடுப்பதற்காக கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்பூட்டல்களை மேற்கொண்டு வருகிறோம்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து பாடசாலை முறையில் அனைத்து இனங்களும் உள்ளடக்கப்படும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். சமூக வலைத்தளங்கள் ஊடாக கடும்போக்குடைய கருத்துக்களை பரப்புவதைத் தடுக்கவும், பாதிப்புக்களை ஏற்படுத்தும் வெளியீடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும்தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடும்போக்கு எண்ணக்கருக்களைக் கொண்ட சமூகவலைத்தள கணக்குகளை செயலிழக்கச் செய்யவும் கடும்போக்குடைய கருத்துக்கள் வெளியிடும் இடங்கள், கடும்போக்கு சொற்பொழிவுகளை ஆற்றுகின்றவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.