சிரேஷ்ட உப தலைவர் –தயா கமகே தே. ஊ. சங்கத் தலைவர் – அகிலவிராஜ் தேசிய அமைப்பாளர் பதவி ரத்து
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் இடம்பெற்றுள்ளன. நேற்றைய தினம் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூடிய கட்சியின் செயற் குழுக் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிணங்க கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக அமைச்சர் தயா கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி செயற்குழுவின் தீர்மானித்திற்கமைய இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கட்சியால் புதிதாக பதவிகளை பொறுப்பேற்றவர்களில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும், பிரதியமைச்சர் அனோமா கமகே ‘லக் வனிதா’ மகளிர் முன்னணியின் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரான கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு அதற்கு மேலதிகமாக தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அனைத்து தொழிற்சங்க கண்காணிப்பாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டார்.
கட்சியில் அரசியல் செயற்பாடுகளை வழிநடத்தும் பொறுப்பு மஹிந்த இரதாஸ. நந்தபால விக்ரமசூரிய ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் செயற் குழுவில் அமைச்சர் சுஜீவ சேனசிங்கவும், லசந்த குணவர்தனவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை எதிர்காலத்தில் மேலும் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
கட்சியின் நீக்கப்பட்ட பதவிகள் மற்றும் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட பதவிகள் நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சியின் புதிய யாப்புக்குள் உள்வாங்கப்பட்டு எதிர் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.