27122024Fri
Last update:Wed, 20 Nov 2024

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அதிகாரிகளின் ஆலோசனைகளையும் மீறி ஜனாதிபதி யாழ்.விஜயம்

President7aயாழ். நகரில் நேற்று மூன்றடுக்கு பாதுகாப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு நேற்று (03) யாழ். நகரப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மூன்றடுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தியிருந்தனர். யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஜெட்விங்’ நட்சத்திர ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி நேற்று(03) முற்பகல் யாழ் வந்திருந்தார்.

இவரின் விஜயத்தை முன்னிட்டு யாழ். நகரப்பகுதிகளில், கட்டிடங்கள் மற்றும், வீடுகள், வீதியோரங்களில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான பின்னணியிலேயே நேற்றையதினம் ஜனாதிபதி யாழ். சென்றிருந்தார்.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் ஜனாதிபதியை இலக்குவைத்து மறைக்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அரசாங்கம் இதனை மறுத்திருந்த நிலையில், ஜனாதிபதியின் யாழ். விஜயத்தை முன்னிட்டு நகரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

நகரப்பகுதியில், விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய்களை கொண்டு சோதனைகளை மேற்கொண்ட துடன், பூட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் களஞ்சிய அறைகள் திறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ். ஆஸ்பத்திரி சந்தி மற்றும் புல்லுக்குளம் வீதி கஸ்தூரியார் வீதி உள்ளிட்ட பொலிஸ் நிலைய வீதிகள் மூடப்பட்டதுடன், பழைய கட்டிடங்கள், மற்றும் சிறுவீதிகளிலும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி வடக்கிற்கு வந்து சென்றபோது ஏற்படுத்தப்படாதிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.