பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்திற்கு அமைய. அவரது ஆலோசனையுடன் தற்போது சீகிரிய கடற்படை வளாகத்தில் வெற்றிகரமாக இடம்பெற்று வரும் “யொவுன்புர” இளைஞர் சேவைகள் மன்றத்தின் அடுத்த யொவுன்புர செயலாளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக சட்டம் மற்றும் நீதி, தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
“எதிர்காலம் ஆரம்பமானது” எனும் தொனிப் பொருளில் 30 ஆம் திகதி மாலை 5 மணியளவில் சீகிரிய விமானப் படைத் தள வளாகத்தில் கோலகலமாக ஆரம்பமான உத்தியோகபூர்வமான “யொவுன்புர” தேசிய மாநாடடில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய கொள்கை மற்றும் அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இத்தேசிய நிகழ்வில் நாடளாவிய ரீதியில் 5000 இளைஞர் யுவதிகள் கலந்து கொள்வதுடன் உலக நாடுகளைச் சேர்ந்த 120 இளைஞர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
தொடர்ந்து அமைச்சர் சாகல ரத்நாயக்க இங்கு உரையாற்றுகையில்;
1977 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இளைஞர் விவகார அமைச்சராகப் பதவியேற்றிருந்த ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்திற்கமைய முதலாவது யொவுன்புரய தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாநாடு 1984 ஆம் ஆண்டு பொலன்னறுவையில் இடம்பெற்றது.
27 வருடங்களின் பின்னர் தற்போது பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சீகிரியாவின் ‘யொவுன்புரய’ தேசிய இளைஞர் மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
சமாதானமும், அபிவிருத்தியும் மிகைத்து வரும் இலங்கையில், இளைஞர்களுக்கிடையில் ஒற்றுமை விருத்தியாவதுடன் சர்வதேச ரீதியில் ஒற்றுமை வலுப்பெறுகின்றது. தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு இளைஞர் சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதமரின் ஆலோசனைகளுக்கும் வழிகாட்டலுக்கும் அமைய ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இத்தேசிய மாநாடு ஏனைய நாடுகளுக்கும் முன்மாதிரியாகும்.
பாதைகள் அபிவிருத்தி, பாலங்கள் அமைப்பு, மற்றும் ஏனைய புனரமைப்புப் பணிகள் மாத்திரம் ஒரு நாட்டின் முன்னேறறத்திற்குப் போதுமானதல்ல. நாட்டின் இனங்களிடையே பரஸ்பர ஒற்றுமை கட்டியெழுப்பப்படல் வேண்டும். அது நாட்டின் பாரிய அபிவிருத்திக்கு வழிகோலும். தென் மாகாண மக்களிடையே உறுதியான ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது என்றார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேராவும் இங்கு உரையாற்றினார்.