சாவகச்சேரி வெடிபொருள் மீட்பு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் காண்பித்து நல்லிணக்க செயற்பாடுகளைக் குழப்புவதற்கு அடிப்படைவாதிகள் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை அல்ல என்பதை யாழ் மாவட்டத்துக்குப் பொறுப்பான பாதுகாப்பு அதிகாரி தன்னிடம் உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
நேற்று பத்தரமுல்லையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கின் பாதுகாப்பு நிலைமை, நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். யுத்தம் முடிவடைந்த பின்னர் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை இதுவே முதற்தடவை அல்ல. இதற்கு முன்னர் 25 தடவைகள் இவ்வாறான வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக யாழ் பாதுகாப்பு கட்டளை அதிகாரி தன்னிடம் கூறியதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி ஜனாதிபதியை இலக்குவைப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போது, சிறியதொரு விடயம் ஒன்று கிடைத்தால் அதனை பலூன் போல ஊதிப் பெரிதாக்குவது நன்கு தெரிந்ததே. அப்படியாயின் எனக்கு இலக்குவைத்து கொண்டுவரப்பட்டது என்று என்னாலும் கூற முடியும்.
பொது இடங்களை அழிப்பதற்குக் கொண்டுவந்ததாக இன்னுமொருவர் கூற முடியும். இவை அனைத்தும் சிந்தனையின் அடிப்படையில் வெளியிடப்படும் ஊடகங்கள். உண்மைகள் அல்ல என்றார்.
அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் மத்தியில் நம்பிக்கை மிக்க தலைவராகக் காணப்படும்போது அடிப்படைவாதிகள் அதனை எதிர்க்கின்றனர். இந்த நிலைமை மாறி வரும் நிலையில் நாட்டில் ஏற்படும் நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த கால வரலாறுகளை எடுத்துப்பார்த்தால் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படக்கூடாது என செயற்பட்ட தலைவர்களே கொல்லப்பட்டனர். அதாவது மத்தியஸ்தமாக செயற்படுபவர்கள் இலக்கு வைக்கப்பட்டமையே வரலாறு. இதனை வைத்துப் பார்க்கும்போது அரசியல் நிலைப்பாடும் இருக்க முடியும் என்றார்.