27122024Fri
Last update:Wed, 20 Nov 2024

உரிய முறையில் கடமைகளை நிறைவேற்றும் அதிகாரிகள் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையில்லை – ஜனாதிபதி

01 30aஇன்று அரசாங்க சேவையில் சிலர் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என்று ஆவணங்களில் கைச்சாத்திடுவதில் இருந்தும் விலகி இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தமது கடமைப் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றும் அதிகாரிகள் ஒருபோதும் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை ஏற்படாது எனக் குறிப்பிட்டார்.

மக்களுக்காக தமது கடமைப் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு சார்பாக அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இருக்கும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கம் என்ற வகையில் புதிய நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் அதில் எப்போதும் அரசாங்க அதிகாரிகளே முதன்மை வகிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

இன்று (29) முற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 33வது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

நல்லாட்சி எண்ணக்கருவை சாத்தியப்படுத்தும் பணியின் ஆரம்ப நடவடிக்கையாக 19வது அரசியல் யாப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதனூடாக அரசியல் பழி வாங்கல்கள் மற்றும் அரசாங்க சேவையில் இடம்பெறும் முறையற்ற நிலைமைகளை தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவாக அரசியல் அழுத்தங்களின்றி தமது கௌரவத்தையும் கீர்த்தியையும் பாதுகாத்து செயற்படுவதற்கு அரசாங்க ஊழியர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்க சேவையில் ஒரு சிறிய ஸ்தானத்திலிருந்து தாம் அரச தலைவர் பதவி வரை பயணித்தது அரசியல் பழிவாங்கலின் ஒரு விளைவாகவாகும் என்றும் ஜனாதிபதி இங்கு நினைவுகூர்ந்தார்.

ஒரு அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்திலும் சரி ஜனாதிபதி பதவியில் இருக்கும்போதும் சரி தாம் பகல் உணவாக வீட்டிலிருந்து கொண்டுவரும் வாழையிலையில் சுற்றிய சோறாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ”அரசர்கள் அரசர்களைப்போன்று பகல் உணவை சாப்பிட வேண்டும்” என்றும் ”மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியின் சலுகைகளை அனுபவிக்கத் தெரியாதவர்” என்றும் அண்மையில் ஒரு பிக்கு குறிப்பிட்ட கூற்றை நினைவுபடுத்திய ஜனாதிபதி, ஒரு அரசரைப்போன்று செயற்பட தாம் தயார் இல்லை என்றும் ஜனாதிபதி ஆயினும்சரி அரசாங்க அதிகாரியாயினும்சரி சாதாரண பொது மகனானாயினும்சரி எல்லோரும் சமமாக வாழ்வதற்கேற்ற ஒரு சமூகத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் அத்தகையதொரு கூற்று ஒருபோதும் பொருத்தமானதல்ல எனக் குறிப்பிட்டார்.

அரசாங்க அதிகாரிகள் தமது சலுகைகளுக்காக போராடுவதை தாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என்பதோடு, நல்லாட்சி எண்ணக்கருவில் நடைமுறைப்படுத்தப்படும் ஊழல் மோசடியற்ற ஒரு அரசாங்கத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையிலும் அவர்கள் அதேபோன்று தமது பொறுப்புகளை நிறைவேற்றுவார்களென தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்க நிர்வாக, முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அமைச்சர் சாகல ரத்னாயக்க உள்ளிட்ட அமைச்சர்களும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், அரசாங்க நிர்வாக சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

03 01 13 08 06 04