திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில் கடற்படை முகாம் இருந்த 177 ஏக்கர் காணியில் இரண்டாம் கட்டம் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
546 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் காணிகளே நேற்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர்களான க. துரைரெட்ணசிங்கம், அப்துல்லா மஃருப், கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான துரைராசசிங்கம், சி. தண்டாயுதபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த காணிக்குள் சம்பூர் மகா வித்தியாலயம், ஸ்ரீ முருகன் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் விநாயகர் ஆலயம், விவசாய சம்மேளனக் கட்டடம் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடம் நூல் நிலையம், மூதூர் பிரதேச சபை உப அலுவலகம் போன்ற பல பொது கட்டடங்களும் 546 குடும்பங்களுக்கு சொந்தமான குடியிருப்பு காணிகளும் நேற்று விடுவிக்கப்பட்டன.
சம்பூரில் கடற்படை முகாமுக்கென சுவீகரிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி, இந்தப் பிரதேச மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனை செவிமடுத்த அரசாங்கம் கடற்படை முகாமை வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கும், காணிகளைக் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கும் முடிவு செய்து அறிவித்தது.
இதற்கமைய, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியன்று சம்பூருக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 818 ஏக்கர் காணிகளை விடுவித்தார். இரண்டாம் கட்டமாகவே நேற்று காணிகள் விடுவிக்கப்பட்டன.
கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் 1055 ஏக்கர் காணிகள் இருந்தன. இவற்றில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட 818 ஏக்கரைவிட மிகுதியாக இருந்த 177 ஏக்கர் காணிகளே நேற்று பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன.
அரசாங்கம் உறுதியளித்தற்கமைய கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சகல காணிகளும் நேற்றுடன் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உரையாற்றுகையில்,
சம்பந்தன் உரை
சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதனை நாம் அறிவோம். எனவே இப்பிரச்சினை தொடர்பாக எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் அளவிற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை எதிர்த்தவர்கள் தான் தற்போது அங்கு வேலை செய்து சந்தோசமாக வாழ்கின்றனர்.
எனினும் அங்கும் பிரச்சினை உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தினமும் சம்பூரைச் சேர்ந்த பலர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனல் மின் நிலையம் தொடர்பான பிரச்சினையை பற்றி பேசி வருகின்றனர்.
நான் நினைத்தால் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுடன் கதைத்து அனல் மின் நிலையத்தை நிறுத்தி இருக்கலாம். அல்லது பிரதமருடன் கதைத்து நிறுத்தி இருக்கலாம் அல்லது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கதைத்து நிறுத்தலாம் ஆனால் சம்பந்தர் ஐயா இதை செய்கிறார் இல்லை என்று சொல்லி வருகிறார்கள்.
திருகோணமலைக்கு பல்வேறு புதிய திட்டங்கள் பல நாடுகளின் மூலம் வந்த வண்ணம் இருக்கின்றன. அண்மையில் சிங்கப்பூரின் இலங்கைக்கான தூதுவர் என்னை 2 முறை சந்தித்தார் திருகோணமலையின் அபிவிருத்தி தொடர்பாக பாரிய அபிவிருத்தி திட்டம் ஒன்றை அவர்கள் நடைமுறைப்படுத்தவுள்ளனர். இவ்வாறான திட்டங்கள் இலங்கைக்கு இன்று தேவையானதே.
ஆனால் அனல் மின் நிலையம் தொடர்பாகவும் அதனால் ஏற்படும் பல பாதிப்புக்கள் தொடர்பாகவும் நான் விசாரித்துள்ளேன் இது இரண்டு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒன்று நிலக்கரி எரிப்பதனால் ஏற்படும் தூசி, இரண்டாவது இதனால் வெளிவந்து பரவக் கூடிய சாம்பல். இவை பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
எனவே இவ்வாறான தீமைகள் ஏற்படவும் எமது மக்களுக்கு அநீதி ஏற்படவும் நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். சுற்றுப்புற சூழல் தொடர்பாக நாட்டின் அரசாங்கத்திற்கும் எமக்கும் பல பொறுப்புகள் உள்ளன. இவ்விடயம் தொடர்பாக மீண்டும் ஒரு முறை சம்பூர் மக்களை நாம் சந்திப்போம் அப்போது மக்களின் கருத்துக்களும் நிபுணர்களின் கருத்துக்களும் இதன் போது ஆராயப்படும். எனவே இவ்விடயம் தொடர்பாக அனைவரும் நிதானமாக சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.