தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால் அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும். அதன் மூலமாகவே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும் என மொழிகள், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தனிநாடு உருவாகாமல் ஒரே நாட்டுக்குள் தமிழர்கள் வாழவேண்டும்,தமிழர்கள் ஆயுதம் ஏந்தக்கூடாது என்றால் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். நேற்று(28) திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையில் சமாதான சகவாழ்விற்கான அணுகுமுறைகள் பற்றிய தேசிய கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரித்தானிய தூதரகத்தின் அனுசரணையுடன் சேவாலங்கா நிறுவனம் மற்றும் தேசிய சமாதான கற்கைகள் நிறுவகம் இணைந்து இந்த கருத்தரங்கினை நடாத்தியது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன்:
இன நல்லிணக்கம் என்பது வானத்தில் இருந்து வரும் விண்கல் அல்ல.மாறாக பாதாளத்தில் இருந்து வெளிவரும் அற்புத பொருளும் அல்ல. மக்கள் மனதில் உருவாக வேண்டிய, உருவாக்கப்பட வேண்டிய ஒரு செயற்பாடு ஆகும். இதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
இதில் முதலாவது நிபந்தனையாக சமத்துவத்தை கொள்ள முடியும். இனங்களுக்கு மத்தியில் மதங்களுக்கு மத்தியில் சமத்துவம் இருக்கும் போதே சகவாழ்வினை ஏற்படுத்த முடியும். சகவாழ்வு இல்லாத இடத்தில் சமத்துவத்தை பற்றி பேசினால் அது ஆட்சி செய்பவருக்கும் அடிமைக்கும் இடையிலான உறவாகவே கருதப்படும். நாங்கள் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை அலசி ஆராய்ந்து தவறுகளை திருத்திக் கொள்ளும் மனப்பக்குவத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்த நாட்டில் உள்ள அனைவரும் தவறு விட்டுள்ளோம்.
வரலாற்றினை நாங்கள் திரும்பி பார்ப்பது அந்த நிலைக்கு போவதற்கு அல்ல. அந்த இருண்ட பகுதிக்குள் மீண்டும் செல்லக்கூடாது என்பதற்காகவே ஆகும். அந்த நிலையை ஏற்படுத்துவதற்கு யாருக்கும் அனுமதியளிக்க முடியாது.
இன்று இனவாதம் இல்லை. மதவாதம் இல்லை. தீவிரவாதம் இல்லை.
ஏன் நாங்கள் கொடிய யுத்தத்தினை சந்தித்தோம் என்பதை நாங்கள் ஆராய வேண்டும். யுத்தம் ஆரம்பித்ததற்கான அடிப்படை காரணத்தினை கண்டறிந்து அவற்றினை நிவர்த்தி செய்ய வேண்டும். அப்போது தான் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தடுக்க முடிவதுடன் சிறந்த ஜனநாயக நாட்டினை கட்டியெழுப்ப முடியும்.
ஒரே நாட்டுக்குள் நாங்கள் அதிகாரத்தினை பகிர வேண்டும். அதிகாரங்கள் பகிரப்படுவது தொடர்பில் நாங்கள் பகிரங்கமாக பேசுவதில்லை. அதிகாரப்பகிர்வு என்பது வெறுமனே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மட்டுமல்ல அது ஒரு ஜனநாயக நடவடிக்கையாகும்.