யுத்தத்தின் காரணமாக காணிகளை இழந்த தெல்லிப்பளை, கோப்பாய் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு மீண்டும் தமது சொந்த இருப்பிடங்ளைப் பெற்றுக்கொடுத்து, தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேசங்களின் 701 ஏக்கர் காணிகளை அம்மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (12) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் மூலம் 26 வருடங்களுக்குப் பின்னர் தெல்லிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 650 குடும்பங்களுக்கும் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கும் மீண்டும் அவர்களது சொந்த இருப்பிடங்கள் உரிமையாகின்றது. அந்தவகையில் இதுவரை காலமும் பாதுகாப்புப்படைவசம் இருந்துவந்த கோப்பாய் பிரதேசத்தின் சகல காணிகளும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யுத்தகாலத்தில் பாதுகாப்புப்படையினரின் பயன்பாட்டுக்காக சுவீகரிக்கப்பட்டிருந்த தெல்லிப்பளை நடேஷ்வரா மகா வித்தியாலயம் மற்றும் கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன மீண்டும் அப்பிரதேசப் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக அவற்றின் உரிமைப்பத்திரங்கள் அப்பாடசாலைகளின் அதிபர்களிடம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது.
இதன்மூலம் 26 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த ஊர்ப் பாடசாலையில் கல்விகற்கும் வாய்ப்பை தெல்லிப்பளை பிள்ளைகள் பெற்றுக்கொள்கின்றனர். இதுவரையில் அப்பிள்ளைகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தற்காலிக பாடசாலைகளிலேயே தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு 65000 வீடுகளை அமைத்துக்கொடுக்கும் கருத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் ஒரு முன்மாதிரி வீட்டையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
மக்களின் சொந்த இருப்பிடங்களை அவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்களது விருப்பங்களுக்கேற்ப திட்டங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து தெல்லிப்பளை நடேஷ்வரா மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, வடக்கிலும் தெற்கிலும் எவ்வித பேதங்களுமின்றி எல்லா மக்களுடையவும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனக் குற்பிட்டார்.
வடக்கு மக்களின் காணி உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொடுத்து அவர்களை சொந்த இருப்பிடங்களில் குடியேற்றுவதை ஒரு முன்னுரிமைக்குரிய விடயமாகக் கருதி அரசாங்கம் செயற்படுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இத்தகைய நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில் தெற்கிலுள்ள சில அடிப்படைவாதிகள் அரசாங்கத்திற்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கிலுள்ள அப்பாவி மக்கள் முகாம்களில் அனுபவிக்கும் கஷ்டங்களை நேரில் கண்டறிய வடக்கிற்கு வருகைதருமாறு அவர்களுக்கு அழைப்புவிடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டங்களை பலப்படுத்துவதற்காக வடக்கிற்குச் செல்லும் பிரதிநிதிகள் வடக்கிற்கு மட்டுமன்றி தெற்கிலுள்ள மக்களுக்கும் அது தொடர்பாக அறிவூட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டங்களைப் பலப்படுத்துகின்றபோது முதலில் தெற்கு மக்களிடம் அது குறித்த தெளிவை ஏற்படுத்துவது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார். விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் எவருக்கும் முன்வைக்க முடியும். என்றாலும், தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கும் அதேவகையில் எல்லோரும் அர்ப்பணத்துடன் செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே, முதலமைச்சர் சி வி. விக்னேஸ்வரன், புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா ஆகியோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.