15012025Wed
Last update:Tue, 07 Jan 2025

அரசியலமைப்பு சபை ஏப்ரலில் கூடுகிறது; கட்சித் தலைவர் கூட்டத்தில் இறுதி முடிவு

parliament rs colமுதல் அமர்வில் செயற்பாட்டுக் குழு உப தலைவர்கள் தெரிவு

அரசியலமைப்பு சபை ஏப்ரல் முதல் வாரத்தில் கூட இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடை பெற இருக்கும் கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக அறிய வருகிறது.

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை கடந்த வாரம்

ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.சுதந்திரக் கட்சி மற்றும் மாற்று எதிர்க்கட்சி என்பவற்றின் யோசனைகள் அடங்கலாக மேற்படி பிரேரணை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக கூட்டுவது குறித்து அடுத்த வாரம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் அரசியலமைப்பு சபையை கூட்டி புதிய அரசியலமைப்பு குறித்து ஆராய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.

அரசியலைமப்பு சபையையும் பாராளுமன்ற அமர்வுகளையும் வெவ்வேறு நாட்களில் கூட்டுவதாக ஒரே நாளில் இருவேறு நேரங்களில் கூட்டுவதா என்பது குறித்தும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பு சபையின் முதல் நாள் அமர்வில் 7 உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதோடு நடவடிக்ைகக் குழுவுக்கு 21 அங்கத்தவர்களும் தெரிவாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.இதன் தலைவராக சபாநாயகர் செயற்பட இருப்பதோடு பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர், நீதி அமைச்சர் இதில் பதவி வழியாக தெரிவாக உள்ளதுடன் ஏனைய அங்கத்தவர்கள் சகல கட்சிகளையும் உள்வாங்கும் வகையில் நியமிக்கப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தவிர உப குழுக்களும் இதன் போது தெரிவாக உள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை கடந்த ஜனவரி 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது .இந்த பிரேரணை மீதான விவாதம் ஜனவரி 12 ,பெப்ரவரி 23 ,24 மற்றும் மார்ச் மாதம் 9 ஆகிய திகதிகளில் விவாதிக்கப்பட்டன. இறுதியில் குறித்த பிரேரணை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட போதும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் முடிவெடுக்கப்பட்டிருக்கவில்லை.இது தொடர்பில் தீர்மானிக்கவே அடுத்த வாரத்தில் கட்சித்தலைவர் கூட்டம் நடைபெற இருப்பதாக அறியவருகிறது.அடுத்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் வழமை போன்று கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது.

இதே வேளை ஏப்ரல் நடுப்பகுதியில் மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்ைக அரசாங்கத்திற்கு கையளிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜெயம்பதி எம்.பி தெரிவித்தார். இந்த அறிக்ைகயும் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஆராயும் செயற்பாட்டுக் குழுவுக்கு வழங்கப்பட்டு அதில் உள்ள அம்சங்கள் குறித்தும் ஆராயப்படும் எனவும் அவர் கூறினார்.

முடிந்தளவு விரைவில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று தெரிவித்த அவர், தேர்தல் மறுசீரமைப்பு குறித்தே முதலில் ஆராய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.