ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில், இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகளை விபரிக்கும் To End a Civil War: Norway’s Peace Engagement in Sri Lanka ” என்ற நூலின் அறிமுக நிகழ்வில், உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்ததில் இருந்து, இலங்கையில் ஜனநாயகத்தின் பலம் அகற்றப்பட்டது.
போருக்குப் பின்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அவர் வாக்குறுதி அளித்த போதிலும், அதனை அவர் ஒருபோதும் நிறைவேற்றவில்லை.
சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இரண்டு தடைகள் இருந்தன.
முதலாவது, இலங்கையில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளான ஐதேகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஒருபோதும் ஒன்றிணைந்து செயற்படுவதில்லை. ஒரு கட்சி முன்னே சென்றால், மற்றைய கட்சி அதனை அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும்.
இரண்டாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அரசியல் பிரச்சினைகளுக்கு இராணுவத் தீர்வுகள் சாத்தியமாகும் என்று நம்பி, வன்முறை மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை. இது அரசியல் ரீதியான முட்டாள்தனம்.
வெவ்வேறு நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டுமானால், கொலைகளை நிறுத்த வேண்டும் என்று பிரபாகரனிடம் நோர்வே குழுவினர் தெளிவாக கூறியிருந்தனர்.
நோர்வேயின் அமைதி முயற்சியின் மூலம், அடையப்பட்ட பெரிய விடயம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.