25112024Mon
Last update:Wed, 20 Nov 2024

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்புத் தரப்பு அச்சுறுத்தல்

PM colsri 9210175551347 4057608 04032016 arrவடக்கில் அண்மைக்காலமாக தமிழ் ஊடகவியலாளர்கள் பாதுகாப்புத்தரப்பினரால் அச்சுறுத்தப்படுவது, விசாரிக்கப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பு உயரதிகாரிகளிடம் விளக்கம் கோருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மேலதிகச் செயலாளர் சமன் அதாவுட ஹெட்டிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடகவியலாளர் தயாபரன் பயங்கரவாத தடுப்புப்பிரிவு (TID) அதிகாரி எனக் கூறிக்கொண்டு வந்தவர்களால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதே பிரதமர் இந்த அவசர அறிவுறுத்தலை விடுத்தார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே இத்தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் தயாபரன் பிரதமருடனான சந்திப்புக்கு வருவதற்காக புதன்கிழமை மாலை புறப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரி எனக் கூறிக் கொண்டு நவரட்ன என்பவர் வந்து கொலைச் சம்பவமொன்று சம்பந்தமாக விசாரிக்க வேண்டுமெனத் தெரிவித்து விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதற்கான கடிதத்தைக் காண்பித்து பின்னர் வருவதாக கூறிவிட்டு சென்றதாகவும் இதுபோன்று பல சம்பவங்கள் அண்மைக்காலமாக இடம்பெறுவதாகவும் இது ஊடகவியலாளர்களை மன உளைச்சளுக்கு உட்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

எமது வீடு, அலுவலகம், என்று தொடங்கி ஊரிலும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர் இது எம்மை மனதளவில் பெரிதும் பாதிக்கச் செய்துள்ளது எனத் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பாக உடனடியாக பொலிஸ் தரப்புடன்பேசி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தனது மேலதிகச் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவு (TID) இப்போது கிடையாது. அப்படி இருக்கும்போது இது எப்படி நடந்தது என்பதை விசாரித்தறியுமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

மற்றொரு தமிழ் ஊடகவியலாளர் நிக்சன் விடுத்தவேண்டுகோளில் வடக்கில் காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் கொல்லப்பட்டோர் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் பொருட்டு தனியான விசாரணைப் பிரிவை அமைத்து துரித விசாரணைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் இது தொடர்பில் காலம் கடத்தாமல் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்ததுடன் ஊடக அமைப்புகளும், ஊடகவியலாளர்களும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

செய்திகளை வெளியிடுவதில் ஊடக நிறுவனங்களுக்கிடையில் ஒற்றுமை பேணப்படவேண்டும். அப்படி நடக்கும் போது ஊடகங்கள் விடயத்தில் தான் ஒருபோதும் தலையிடப் போவதில்லை எனவும் பிரதமர் தெரிவித்தார்.

ஓரிரு ஊடகங்கள் எனக்குச் சேறுபூசுவதற்கென்றே கங்கணம்கட்டிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின.

இவ்வாறு பிரதமரையோ, ஜனாதிபதியையோ விமர்சித்து சேறுபூசுவதற்கு 2015 ஜனவரிக்கு முன்னர் உங்களால் முடிந்ததா? என்பதை எண்ணிப்பார்க்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இங்கு தெரிவித்தார்.