இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் 'ரைசீனா பேச்சுவார்த்தைகள்' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இச்சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.
இலங்கையிலிருந்து வந்துள்ள பழைய நண்பர் ஒருவரை சுஷ்மா சுவராஜ் சந்தித்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் (01) ஆரம்பமான ரைசீனா பேச்சுவார்த்தைகள் மாநாட்டில் உரையாற்றிய சந்திரிகா குமாரதுங்க, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முரண்பாடு பிராந்திய ஒத்துழைப்புக்களுக்குத் தடையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவநம்பிக்கை மற்றும் உறுதியற்ற நிலைமை என்பன பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையில் பாதிப்புச் செலுத்துவதாகவும் குறிப்பிட்ட அவர், எனினும் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருப்பது பிராந்திய ஒத்துழைப்புக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
உலகத்தில் அதிக வறுமையான மக்களைக் கொண்ட தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கிடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு செயற்றிட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும். அதிகரித்துவரும் பிராந்திய சுற்றுச்சூழல், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களிலும் ஒத்துழைப்புக்கள் அவசியம் என்பதையும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.