சர்வதேச சந்தை வாய்ப்புக்களை இலக்கு வைத்து இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு எதிராக செயற்படுபவர்கள் துரோகிகள் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் இவற்றை நடைமுறைப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்ட பிரதமர் இதற்கெதிராக செயற்படும் அரச மருத்துவ சங்கத்தினர். பொறியியலாளர் சங்கத்தினருக்கு எதிராக மார்ச் 15ல் கொழும்பில் பல்வேறு அமைப்புகளையும் திரட்டி ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுக்கப் போவதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை பார்வையிட்ட பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் இது தொடர்பில் விளக்குகையில் :-
ஹம்பாந்தோட்டையின் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட எனது தலைமையில் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, காமினி ஜயவிக்ரம பெரேரா, மஹிந்த அமரவீர, அர்ஜுன ரணதுங்க, திலீப் வெதஆரச்சி ஆகியோர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்தோம்.
ஹம்பாந்தோட்டை மூலம் நாடடின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். ஹம்பாந்தோட்டையில் எந்தவொரு முறையான திட்டமுமில்லாமல் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதாக ஏற்கனவே விமர்சித்தவன் நான்.
இவை தொடர்பில் நானும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கவனம் செலுத்தியுள்ளதுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கிளன் மூலம் நாட்டிற்குப் பிரயோசனத்தைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பது பற்றி கலந்துரையாடியுள்ளோம்.
இதற்காக பெருமளவு முதல் செலவு செய்யப்படடுள்ளது. இது எமக்கு நன்கொடையாக கிடைத்ததல்ல. எந்த நபரினது பணமுமல்ல.
இவை கடனாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி என்பதால் அரசாங்கம் அதனை மீள செலுத்த வேண்டியுள்ளது. இதனைக் கவனத்திற்கொண்டு இதில் பொருளாதார ரீதியில் பிரயோசனம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும்.
கட்சி பேதமின்றி மாகாணத்தில் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் அழைத்து இது தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன நிறுவனம் கப்பல் திருத்தும் நிலையம் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை ஆரம்பிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள் இதுபோன்ற செயற்திட்டங்களை எதிர்பார்த்துள்ளன.
மேலும் 1000 ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் கோரியுள்ளது. கைத்தொழில் பேட்டை மற்றும் தொழில்நுட்ப மத்திய நிலையம் போன்றவை இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் மூலம் நாட்டுக்குப் பொருளாதார பிரயோசனத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை நாடளாவிய ரீதியில் உருவாக்குவதே எமது நோக்கம். ஹம்பாந்தோட்டை, வட மேல் மாகாணத்தின் சில பிரதேசங்கள், திருகோணமலை, மேல் மாகாண நகர்ப்புறம் போன்ற பகுதிகளில் சுற்றுலாத்துறை, கைத்தொழில் துறை, தொழில் நுட்பத் துறைகளை முன்னேற்றி அதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதே எமது எதிர்பார்ப்பு.
சர்வதேச வர்த்தகச் சந்தையை இலக்காகக் கொண்டு இதன் உற்பத்திகள் முன்னெடுக்கப்படுவதுடன் எமது இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதும் இதன் நோக்கமாகும். எமது உள்ளூர் வர்த்தகத்தை எதிர்பார்த்து இங்கு முதலீட்டாளர்கள் வரப்போவதில்லை. எமது நாட்டு சனத்தொகை வெறும் இரண்டு கோடி மட்டுமே.
இந்தியாவில் 1200 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் 500 மில்லியன் பேர் வாழுகின்றனர். அத்தோடு அமெரிக்கா போன்ற நாடுகளையும் குறிப்பிட முடியும்.
இந்த நாடுகளை இலக்கு வைத்தே இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். ஆந்திர பிரதேசத்தில் 10,000 ஏக்கர் காணிகளை சீனாவிற்கு வழங்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இணங்கியுள்ளார்.
சீனா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
ஜீ. எஸ். பி. பிளஸ் வரியை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாரிய சர்வதேச சந்தை வாய்ப்பு எமக்கு இல்லையெனில் கைத்தொழில் பேட்டைகளை இங்கு உருவாக்கி பயனில்லை. சர்வதேச சந்தைக்கு உற்பத்திப் பொருட்களை வழங்குவதே எமது நோக்கமாகும்.
எமது வெற்றி இதனூடாகவே சாத்தியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.