இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் மிருகபலிகளை சட்டரீதியாகத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்துசமய விவகார, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இது தொடர்பான சட்டமூலமொன்றை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் தினகரனுக்குத் கூறினார்.
இந்து ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலிகளைத் தடுக்கும் வகையில் சட்டவரைபொன்று தயாரிக்கப்படவிருப்பதாகவும், சட்டவரைஞர்கள் திணைக்களத்தில் இதனைத் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், ஒரு மாதகாலத்தில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்து ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலிகள் கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியருந்ததுடன், பெரும்பாலான இந்துக்களால் இது விரும்பப்படுவதில்லையென்றும் அமைச்சர் கூறினார்.
கடந்த காலங்களில் முன்னேஸ்வரம் காளி கோவிலில் இடம்பெறும் மிருகபலிக்கு எதிரான எதிர்ப்பு அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. பௌத்த பிக்குகள் மற்றும் மிருக பாதுகாப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவ்வாறான மிருகபலிகளுக்கு எதிராகத் தொடர்ந்தும் குரல் எழுப்பி விருகின்றனர்.
எனினும், இதனை சட்டரீதியாகத் தடைசெய்வதற்கு சட்டஏற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. இவ்வாறான நிலையிலேயே இந்துக்கோவில்களில் இடம்பெறும் மிருகபலிகளைத் தடுப்பதற்கு சட்டவரைபொன்றை அமைச்சு தயாரித்து வருகிறது.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் அதனை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக குற்றவியல் தண்டனைக் கோவையின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.