கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினையை இரு நாடுகளின் அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.
சுழற்சி முறையில் மீன்பிடிப்பது குறித்து பேச்சுவார்த்தையின் மூலம் தீர்மானிக்க வேண்டும் என வும் அவர் தெரிவித்தார். இதேவேளை, கச்சதீவை அண்மித்த கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதனால் இலங்கை கடற்படையினர் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவை இந்திய மத்திய அரசாங்கம் மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.