22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

தென்னை மற்றும் பனை பொருள் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு…

President01 612Fகொழும்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, வடமேல் மாகாண பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் நேற்று (11) மாலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர்.

இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய பிரதிநிதிகள், தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பாக ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

மேலும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த தென்னை மற்றும் பனை பொருள் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திப் பொருள்களுக்கான வரிகள் அதிகரித்துள்ளதால் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அதைக் கருத்திற்கொண்டு வரிக்குறைப்பு போன்ற சாத்தியமான நிவாரணங்களை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகளை விரிவாகவும் எழுத்து மூலமாகவும் அறியத்தரும்படி கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், இது தொடர்பாக  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் சார்பாக எதிர்வரும் ஜுலை மாதம் கொண்டாடப்படவிருக்கும் சர்வதேச கூட்டுறவாளர் தின விழாவில் பங்குபெறுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் அழைப்புவிடுக்கப்பட்டது.

இதேவேளை கொழும்பு வர்த்தக சங்கத்தினரால் விசேட நினைவுச்சின்னம் ஒன்றும் ஜனாதிபதிக்கு வழங்கிவைக்கப்பட்டது.

அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு வர்த்த சங்கத்தின் தலைவர் அல் ஹாஜ் வை.எம்.இப்ராஹிம், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், வடமாகாண பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் நாகன் கணேசன் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.