22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

ஐ.நா. ஆணையாளர் யாழ், திருமலை விஜயம்

colpage1 001153104400 4001652 07022016 kll cmyநான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் நேற்று யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்து அரசியல் பிரமுகர்களையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்திருந்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர்கள், ஆளுநர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்ட சந்திப்புக்களிலும் அவர் கலந்துகொண்டிருந்தார்.

நேற்றுக் காலை ஹெலிக்கொப்டர் மூலம் யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஹூசைன், வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்களான குருகுலராஜா, ஐங்கரநேசன், டனீஸ்வரன் உள்ளிட்ட குழுவினரைச் சந்தித்தார்.

வடமாகாணத்தில் இன்னமும் அதிகமாகக் காணப்படும் இராணுவப் பிரசன்னம், காணாமல் போனவர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் காணப்படும் இழுபறிகள், தமிழ் மக்களின் காணி விடுவிப்பில் காணப்படும் தாமதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சர், அல் ஹூசைனுக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் காணாமல் போனவர்களின் நிலைமைகள் உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட அறிக்கையொன்றும் முதலமைச்சரால் அவருக்கு வழங்கப்பட்டது.


யாழில். பெண் முறையீடு...

யாழில். பெண் முறையீடு...

அல் ஹூசைனின் விஜயத்தின்போது தமது குறைகளைத் தெரியப்படுத்துவதற்காக காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் அலுவலகத்துக்கு வெளியே காணாமல்போன தமது உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கியவாறு காத்திருந்தனர். வாகனத்தில் சென்ற ஹசைன் அவர்களைக் கண்டதும் இறங்கிச்சென்று வணக்கம் தெரிவித்துக் கலந்துரையாடினார்.

ஹசைனைக் கண்டதும் கண்ணீர்விட்டு அழுது தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாதுள்ளது. இதற்கு ஒரு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர். தான் தற்பொழுது முதலமைச்சரைச் சந்திக்கப் போவதாகவும், பாதிக்கப்பட்ட உங்களை தான் சந்திப்பேன் என்றும் கூறிச்சென்றார்.

முதலமைச்சருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் பலிகக்காரவுடன் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் மற்றும் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து

நல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதற்போது அங்கு காத்திருந்த வடபகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் தமது மீள்குடியேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்றை அவரிடம் கையளித்தனர்.

அதனையும் பெற்றுக்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அங்கிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்குச் சென்றார்.

அதன் பின்னர் இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் சுன்னாகம் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் தமது அனுபவங்களையும் தமது குறைபாடுகளையும் ஹூசைனுக்கு எடுத்துக் கூறியிருந்தனர். மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் ஹூசைன் அவர்களுடைய கருத்துக்களை அறிந்துகொண்டார். யாழ்ப்பாண விஜயத்தை முடித்துக்கொண்டு ஹெலிக்கொப்டர் மூலம் அவர் திருகோணமலைக்குப் பணயமானார்.

பிற்பகல் 2.35 மணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில், முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், விவசாயத்துறை அமைச்சர் துரைராஜசிங்கம், கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, காணி அமைச்சர் ஆரியவதிகலபதி உள்ளிட்ட குழுவினருடன் ஹூசைன் கலந்துரையாடல்களை நடத்தினார். கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இச்சந்திப்புக்களைத் தொடர்ந்து பிற்பகல் 3.40 மணிக்கு உட்துறைமுக வீதியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோவையும் அவர் சந்தித்தார். ஆளுநருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு மனித உரிமைகளுக்கும் பாதுகாப்புக்குமான நிலையம் ஏற்பாடு செய்திருந்த சிவில் சமூக அமைப்புக்களுடான கலந்துரையாடல் நிகழ்வொன்றிலும் ஹூசைன் கலந்துகொண்டார்.

மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், காணாமல்போனவர்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டு தமது குறைகளை அவரிடம் எடுத்துக் கூறியிருந்தர்.

இச்சந்திப்புக்களை முடித்துக்கொண்டு மாலை அவர் கொழும்பு திரும்பினார்.