எந்த மதத்தினதும் உள்ளக விடயங்களிலோ ஒழுக்கக் கட்டுப்பாடுகளிலோ பாராளுமன்றத்திற்கு தலையிட முடியாது. கோரிக்கை முன்வைக்கப்பட்டால் மாத்திரமே தேவையான சட்டங்களை அமைக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பிக்கு நீதிமன்றம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர், மகாசங்கத்தினரின் உடன்பாட்டுடன் அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள முடியும் எனவும் பிரதமர் தெரிவித்தார். இளம் பிக்குமார்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நேற்று (02)அலரி மாளிகையில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது, புத்த மதத்தை பாதுகாப்பது தொடர்பான சரத்து அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தவிர சகலருக்கும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவற்றில் தலையிட அரசாங்கத்திற்கு சட்டபூர்வ உரிமை கிடையாது.
பிக்குமார்கள் தொடர்பான சட்டம் சாசனத்திற்கு உட்பட்டதாகவே மேற்கொள்ளப்படும். மகாசங்கத்தினரின் அனுமதி கிடைத்தால் மட்டுமே அதனை முன்னெடுப்போம்.
புதிய சட்டத்திற்கு எந்த ஒரு மகாசங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவிப்பர் என்று கருதவில்லை.பிக்கு நீதிமன்றம் தேவை எனின் நீதிமன்றத்தினூடாக அதனை மேற்கொள்ளலாம். பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த பிக்குமாரின் குடும்பங்களுக்கு வீடு வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. தேசிய நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த வேண்டும். பிக்குமாரும் ஏனைய மொழி களையும் கற்க வேண்டும் என்றார்.